சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று (மே 9) இந்த ஆண்டிற்கான கல்லூரி கனவு திட்டத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் கல்லுாரி கனவு திட்டம் என்பது 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்து எந்த படிப்பில், எந்தக் கல்லூரியில் சேரலாம், பட்டப்படிப்புக்குப் பிறகான வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்களால் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று சிவதாஸ் மீனா கூறினார்.
தொடர்ந்து மே 13-ம் தேதி வரை மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பேசிய சிவதாஸ் மீனா, “புதுமைப் பெண் திட்டத்திற்கு பின் உயர்கல்வியில் 20 சதவிகிதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் இந்த முயற்சியால் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளனர். எத்தனை மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அனைவரையும் கல்லூரியில் சேர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், புதுமைப் பெண் திட்டம் போல் உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமானது 2024-25-ம் கல்வியாண்டில் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
புதுமைப் பெண் திட்டம் போன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குவது தமிழ்ப் புதல்வன் திட்டத்தித்தின் நோக்கம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“