அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்” என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகில் கடலுக்கு உள்ளே கலைஞர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் பொதுமக்கள் மத்தியில் இந்த பேனா சின்னம் தொடர்பான மாறுபட்ட கருத்துக்களே நிலவி வரும் நிலையில், இந்த பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் வழக்கு தொடர்வர் பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்து வருகிறது.
பேனா சின்னம் மட்டுமல்லாமல் மெரினாவில் ஏற்கனவே அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களில் விதி மீறல்கள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே அனைத்து தரப்பினரின் ஒப்புதல் பெற்ற பிறகு கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதில் மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து 350 மீட்டர் தூரத்திலும், இந்த பேனா சிலை அமைக்கப்படுகிறது. இந்த சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய மாநில அரசுகளிடம் விண்ணபிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் பரிந்துரைகளின்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து துறைகளின் ஒப்புதல்களை பெற்ற பிறகே கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil