கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான ஜக்கி வாசுதேவ், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் பிரபலமான ஆன்மீக சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாறியுள்ள ஈஷா மையத்தில் கடந்த வாரம் சிவாராத்திரி கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஈஷா மையத்தின் தலைவரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான ஜக்கி வாசுதேவ், சிவராத்திரி நடனமாடி பக்தர்களை பரவசப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் நடிகைகள் என திரைத்துறை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
இதனிடையே கடுமையான தலைவலி காரணமாக ஜக்கி வாசுதேவ் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஸ்கேன் எடுத்தபோது, அவரது மூளையில், ரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஜக்கி வாசுதேவ்க்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும் ஜக்கி வாசுதேவ் படுக்கையில் இருந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே ஜக்கி வாசுதேவை தொடர்புகொண்டு நலம் விசாரித்த பிரதமர் மோடி, சத்குரு ஜியிடம் பேசினேன். அவர் விரைவில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நலம் பெற வாழ்த்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“