திருச்சியில் தமிழ் மாநில யாதவ மகாசபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ் மாநில யாதவ மகாசபை திருச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட உள்ளது. திருச்சி மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் அமைப்பாக பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர்கள் 41 நபர்களும் (முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் 5, இணை ஒருங்கிணைப்பாளர்கள் 11, துணை ஒருங்கிணைப்பாளர்கள் 20, ஆகமொத்தம் 41 பேர் )
மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் 12 நபர்கள்,மாவட்டங்களுக்கு 38 ஒருங்கிணைப்பாளர்களும், நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 39 ஒருங்கிணைப்பாளர்களும், சட்டமன்ற தொகுதிகளுக்கு 234 ஒருங்கிணைப்பாளர்களும், மாநில செயற்குழு உறுப்பினர்களாக 114 நபர்களும், பொதுக்குழு உறுப்பினர்களாக 702 நபர்களும் என ஆக மொத்தம் 1180 நபர்கள் மகளிர் உட்பட நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மாநில யாதவ மகாசபை துவக்கப்படுவதின் நோக்கம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வரும் யாதவர்கள் அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத சக்திகளாக வளர்ந்து வருவதை தடுக்க நினைக்கும் தீயசக்திகளை முறியடித்து யாதவர்கள் அரசியல் ரீதியாக உயர் பதவிகள், மேலும், மக்கள் தொகை அடிப்படையில் யாதவ சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் அதிக இடங்கள் பெற்றிட அயராமல் பாடுபடுவது, தமிழகத்தில் அனைத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எண்ணிக்கை, பொருளாதாரம், கல்வி, அரசுப்பணிகளில் மிக்குறைந்த சதவீத பலன்கள் மட்டும் அடைந்துள்ள யாதவர் சமுதாயம் உட்பட மற்ற சமுதாயங்களுக்கும் நியாயமான பங்கீட்டை வழங்கிட வலியுறுத்திடவும், தமிழ்நாடு எங்கும் வாழும் வசதி வாய்ப்பற்ற, ஆனாலும் சிறப்பாக படிக்கக்கூடிய யாதவ மாணவ மாணவியருக்கு கல்வி உதவி செய்வதற்கும், வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்குவதற்காகவும், பொருளாதாரம் மேம்பாடு அடைய உதவுவதற்காகவும், தமிழ்நாட்டில் சிதறடிக்கப்பட்டுள்ள யாதவ சமுதாய ஆற்றல் திறனை ஒருங்கிணைக்கவும், தமிழ் மாநில யாதவ மகாசபை துவங்கப்பட்டுள்ளதின் அடிப்படை நோக்கம் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக் கோன் அவர்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திருஉருவச் சிலையை அரசு செலவில் வைக்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட நீதிமன்றத் தடையாணைகள் ஏதேனும் இருப்பின் அதுகுறித்து பாராளுமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டிய அத்தியாவசியத்தை விளக்கி அனுமதி பெற்று, மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கி விரைவில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடத்திட ஆவண செய்ய கோருகிறோம்.
கால்நடை குறிப்பாக, ஆடு, மாடு உற்பத்தியை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களில் யாதவ சமுதாயத்தினருக்கு பயிற்சி, நிதியுதவி போன்றவற்றில் முன்னுரிமை தந்திட வலியுறுத்துகிறோம். கால்நடை வாரியங்களில் மற்றும் ஆவின் அரசு நிறுவனத்தில் யாதவர்களுக்கு சேர்மன், இயக்குனர்கள் போன்ற கௌரவப் பதவிகள் வழங்கிடக் கோருகிறோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது தாமதமாகும் என முதல்வர் கருதுவார் என்றால், தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு முதல்வர் ஆவண செய்துத் தரவேண்டும் என்பதனை கோட்டையில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
இது தொடர்பாக எங்களின் நியாயமான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து பரிந்துரை செய்து உதவும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டன்ற உறுப்பினர் தஞ்சை நீலமேகம் ஆகியோரையும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் எனக் தெரிவித்தார்.
முன்னதாக, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை.
இனி வரும் காலங்களில் யாதவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ஆதரவு கேட்கும் கட்சியினருக்கு தான் யாதவ சமுதாய ஓட்டு என கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், முத்துசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“