அண்மையில் தமிழகத்தில் எழுந்த தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தின் தொடர்ச்சியாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்துள்ளார்.
முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிட நல்திருநாடும்’ என்ற வரிகள் இடம்பெறவில்லை. இதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, வேண்டுமென்றே குறிப்பிட்ட வரிகள் நீக்கப்பட்டதாக திமுகவினர் கடுமையாக விமர்சித்தனர்.
சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த டிடி தமிழ் நிர்வாகம், கவனச்சிதறல் காரணமாக குறிப்பிட்ட வரிகள் இடம்பெறாமல் போனதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. எனினும், திமுகவினர் சார்பாக ஆளுநர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அதன் ஒரு பகுதியாக, பல்கலைக்கழங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநருடன் கலந்து கொள்வதை தவிர்க்கும் விதமாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்து வருகிறார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழாவையும் அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்துள்ளார். இந்த விழாவில் அரசு சார்பாக உயர்கல்வித்துறை செயலர் கோபால் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கினார்.
மேலும், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய அங்கீகார ஆணையத்தின் தலைவர் அனில் டி சகஸ்கரபுத்தே கூறுகையில், இந்தியாவில் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களில் அண்ணா பல்கலைக்கழகமும் விளங்குவதாக கூறினார். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோல், செயற்கை நுண்ணறிவை விட ஆசிரியர்கள் சிறந்த பயிற்றுநர்களாக இருப்பதாலும், ஒரே நாடு, ஒரே தரவு போன்ற கல்வி முன்னெடுப்புகளாலும், 2020-ஆம் ஆண்டின் தேசிய கல்வி கொள்கை போன்றவற்றாலும் மாணவர்கள் தங்களை பணி வழங்குபவர்களாக ஊக்குவிக்க முடியும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“