குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, சில ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தேவையற்ற அறிக்கைகள் வருத்தம் தருகின்றன என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், தேசியக் கொடியேற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது, ரிசர்வ் வங்கியின் ஒருசில அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
குடியரசு தின விழா நிகழ்ச்சி முடிந்த பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று ஏன் மரியாதை செலுத்தவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு, அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்கவேண்டிய அவசியமில்லை என்றும் அது தொடர்பாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளதை தெரிவித்தனர். இதனால், அங்கே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் அரசாணையை மிறும் வகையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுலகத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் வழியாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி நேரில் சந்தித்து வங்கி அதிகாரிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், ஆர்பிஐ சார்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது: “1. இந்த அறிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தில் ஜனவரி 26, 2022 அன்று 73ம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தின் போது நடந்த நிகழ்வுகளை குறிப்பிடுகிறது.
- குடியரசு தினத்தன்று தமிழ்ப் பண்பாட்டிற்கும் மொழிக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இருப்பினும், பின்னர் ஏற்பட்ட குழப்பத்தில், பாடலை தொடர்பாக சில தேவையற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன, அவை வேண்டப்படாதவை. வருந்தத்தக்கவை.
- தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை அறிவோம். ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் மதிக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.
- இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் மண்டல இயக்குநர் எஸ் எம் என் சாமி தலைமையிலான பிரதிநிதிகள், தமிழக நிதியமைச்சர் திரு டாக்டர் பி தியாகராஜனை சந்தித்து இது தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.