New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/19/as9rpfrqa5ZPEfxcv8h1.jpg)
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதலமைச்சர் என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்- ஆளுநர் ஆர்.என் ரவி
'டிடி தமிழ்' சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாட்டம் நேற்று (அக்.18) கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார்.
முன்னதாக, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ’திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகச் சாடியிருந்தார். அத்துடன் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுறுத்தார்.
இந்நிலையில் ஸ்டாலின் பதிவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நீண்ட விளக்கம் அளித்து எக்ஸ் பதிவிட்டுள்ளார். அதில், "மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக்கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும்கூட தமிழைக் கொண்டு சென்றார்.
ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
"மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 18, 2024
ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.
தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.