தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணித்த நிகழ்வு வைரலாகி வரும் நிலையில், அவர் பயணித்த சலூன் கோச் பலரையும் கவனம் ஈர்த்துள்ளது.
முதல்வராக பதவியேற்று முதல் முறையாக தென்காசி சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பொதிகை ரயிலில், டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்தார். இந்த ரயிலில் சிறப்பு வாய்ந்த சலூன் கோச் இணைக்கப்பட்டிருந்தது. அதிநவீன வசதி கொண்ட இந்த ரயில்பெட்டியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஆனாலும் மக்கள் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறதே என்று ஒருபக்கம் விமர்சனங்களும் எழுந்து வருகின்றனர். இவ்வாறு தனி கவனமும் கடும் விமர்சனத்தையும் சந்திக்கும் இந்த சலூன் கோச் எப்படி இருக்கும்?
அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரயிலில் பயணிக்கும்போது அவர்கள் பயன்படுத்துவதற்காகவே ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டதுதான் இந்த சலூன் கோச். வீடு போன்ற உணர்வை கொடுக்கும் இந்த கோச்சில், குடியரசு தலைவர், பிரதமர், ஆளுனர் முதல்வர் என உயர் பதவியில் இருப்பவர்கள் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகரும் வீடு என்று கூட சொல்லலாம்.
சொகுசு விடுதி போல் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ள இந்த சலூன் கோச்சில், ஏசி வசதியுடன் இரண்டு படுக்கையறைகள் உள்ளன. அதேபோல் பெரிய வரவேற்பறை, சாப்பிடும் அறை சமையல் அறை, உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும் இந்த சலூன் கோச்சில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.
சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இயக்கப்படும் இந்த சலூன் கோச்சில், பொதுமக்கள் யாரேனும் பயணிக்க விரும்பினால், அவர்கள் IRCTCTOURISM.COM என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஆர்டிசிடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சொசுசான சலூன் பெட்டிகளில் ஈடு இணையற்ற வசதிகளுடன் கூடிய வசதிகளுடன் உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த சலூன் கோச் முன்பதிவு செய்தவர்கள் இருக்கும் 2 படுக்கையறை வசதிகளுடன் தேவைப்பட்டால் கூடுதலாக 4 முதல் 6 படுக்கைகள் வரை ஏற்படுத்திக் கொடுக்கும் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த அறையில் சமையல் செய்வதற்காக பாத்திரங்களும் இருக்கும் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த சலூன் கோச்சில் பயணிக்க விரும்புவர்கள் 2 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மாதிரியான சலூன் கோச் 336 பெட்டிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil