ஹிந்தி கத்துக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் இந்தச் சம்பவத்திற்கு பிறகு அந்த ஆசையே போய்விட்டது என கோவா விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஷர்மிளா ராஜசேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சன் நியூஸ் சேனலுக்கு ஷர்மிளா ராஜசேகர் அளித்த பேட்டியில், “நாங்கள் குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம். திரும்பி வருவதற்காக கோவா விமான நிலையம் வந்தோம். அங்கு பரிசோதனை நடைமுறைகள் செய்யும்போது, அங்கு செக்யூரிட்டி பகுதியில் இருந்தவர் இன்னொரு பெட்டியை எடுக்குமாறு என்னிடம் ஹிந்தியில் கூறியிருக்கிறார். எனக்கு புரியாததால், எனக்கு ஹிந்தி தெரியாது என கூறினேன்.
உடனே அவர்கள் நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டார்கள். நான் தமிழ்நாட்டில் இருந்து வருவதாக கூறினேன். அதற்கு நக்கலாக அச்சா எனக் கூறினார்கள். நான் ஏன் அப்படி செய்றீங்கனு கேட்டதற்கு, தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கு, அப்ப ஹிந்தி தெரியுனும்ல, ஹிந்தி தேசிய மொழி, நீங்க கண்டிப்பா ஹிந்தி கத்துக்கணும் என சொன்னார்கள்.
நான் உடனே, ஹிந்தி அலுவல் மொழி தான், தேசிய மொழி இல்லை என்று சொன்னேன். அதற்கு நீங்க போய் கூகுள் பண்ணி பாருங்க என அவங்க கத்தி பேசுனாங்க. இதனால், அருகில் இருந்த மற்ற அதிகாரிகளிடம், இவர் ஏன் இப்படி நடந்துக்கிறார் எனக் கேட்டப்போது, அவர்களும் ஹிந்தி தேசிய மொழி தான், கத்துக்கணும் எனச் சொன்னார்கள். எல்லாருமே அப்படி பேசியதால், நான் அமைதியா வந்துட்டேன்.
பின்னர் சிறிது நேரம் கழித்து கூகுள் பண்ணி ஹிந்தி அலுவல் மொழி தான் என்பதைக் காட்டினேன். ஆனாலும், அவர்கள் ஹிந்தி கத்துக்கணும் என்று வலியுறுத்தினார்கள். இதுக்கு மேல் பேசி ஒன்னும் ஆகப்போறதில்லைனு நான் வந்துட்டேன். பின்னர் என் கணவரிடம் வந்து கூறியபோது, நிச்சயம் புகார் கொடுக்க வேண்டும் என சொன்னார். அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி அறைக்குச் சென்று புகார் கொடுத்தேன். அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, யார் என்று கேட்டார், நான் குறிப்பிட்டு யார் பெயரையும் சொல்ல விரும்பவில்லை, ஆனால் பொதுவாகவே ஹிந்தி திணிப்பது நடக்கிறது என்று சொல்லிவிட்டு வந்தேன்.
இதை பொதுவெளியில் வெளிப்படுத்தியதற்கு காரணம், அந்த விமான நிலையத்தில் எங்க கூட வந்த நிறைய தமிழர்கள், இப்படி தான் நடக்குது என சொன்னது தான். நாங்க நிறைய நாடுகளுக்கு போய்ட்டு வந்திருக்கோம் ஆனால், எங்கேயும் பிரச்சனை இல்லை. இங்கே என் தாய்மொழியில் பேச விடாமல், ஹிந்தியை திணிக்கும் முயற்சி நடக்கிறது. அதனால் தான் வெளியில் கொண்டு வந்தேன்.
சேவைத்துறையில் உள்ளவர்கள், இந்த மாதிரியான மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். எனக்கு ஹிந்தி கத்துக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் இந்தச் சம்பவத்திற்கு பிறகு அந்த ஆசையே போய்விட்டது.” இவ்வாறு அவர் கூறினார்.
#WATCH | “எனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மிரட்டல் குறித்து புகார் அளித்தேன். இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட வற்புறுத்தி திணிப்பதால் போய் விட்டது”
— Sun News (@sunnewstamil) December 14, 2023
-கோவா விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட பெண், சர்மிளா ராஜசேகர் பரபரப்பு பேட்டி!… pic.twitter.com/iKWnUCb142
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.