/indian-express-tamil/media/media_files/2025/09/06/tamil-youtuber-lost-phone-in-uae-dubai-police-deliver-it-back-to-chennai-home-tamil-news-2025-09-06-11-17-27.jpg)
துபாய் விமான நிலையத்தில் தனது மொபைல் போன் தொலைந்து போனதாகவும், அதனை கண்டுபிடித்துக் கொடுத்த துபாய் விமான நிலைய அதிகாரிகள் அடுத்த விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைததாக பிரபல யூடியூபர் மதன் கௌரி தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் யூடியூப் பிரபலமாக வலம் வருபவர் மதன் கௌரி. இவர் அண்மையில் துபாயில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அப்போது, துபாய் விமான நிலையத்தில் விலையுயர்ந்த தனது ஆப்பிள் ஐபோனை துபாய் விமான நிலையத்தில் தொலைத்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த விமான நிலைய ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள், சென்னை சென்றபின் மெயில் போடுமாறு அவரிடம் சொல்லியுள்ளனர்.
இவரும் அதன்படியே, மெயில் அனுப்பிய நிலையில், போனைக் கண்டுபித்துக் கொடுத்த துபாய் விமான நிலைய அதிகாரிகள் அடுத்த விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்ததாக பிரபல யூடியூபர் மதன் கௌரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், "கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த போனை ஒரு நாட்டில் தொலைத்து விட்டு வந்தேன். அந்த நாட்டின் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் எந்தப் பணமும் வாங்காமல் அதனை திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள்.
எமிரேட்ஸ் விமானம் மூலம் நான் துபாயில் இருந்து சென்னை வந்தேன். வரும்போது எனது போனை ஏர்போர்ட்டிலே வைத்து விட்டேன். அது பெரிய ஏர்போர்ட்டாக இருந்ததால், போனை எங்கே வைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் எமிரேட்ஸ் விமானத்தில் இருந்த ஊழியரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அவர்கள் இந்தியா சென்றவுடன் மெயில் போட சொன்னார்கள். போன் துபாய் ஏர்போர்ட்டில் இருந்தால் கண்டிப்பாக கிடைத்து விடும் என்று சொன்னார்கள்.
நான், மெயில் போட்டால் எப்படி போன் கிடைக்கும் என நினைத்தவாறு, மெயில் ஒன்றை அனுப்பி வைத்தேன். அதில், எனது போன் எப்படி இருக்கும், என்ன கவர் போடப்பட்டு இருக்கும் உள்ளிட்ட தகவல்களை நான் வழங்கினேன். அவர்கள் உடனே எனக்கு பதில் அனுப்பினார்கள். அதில் எனது போன் கிடைத்து விட்டது என்று சொன்னார்கள். பிறகு, போனை சென்னைக்கு வந்த அடுத்த விமானத்தில் அனுப்பி வைத்தார்கள்." என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில், பலரும் துபாயின் பாதுகாப்பைப் பாராட்டி வருகிறார்கள். “உலகின் பாதுகாப்பான நாடு,” என்று பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், தான் ஒரு முறை ஒரு மடிக்கணினி பையை தொலைத்துவிட்டதாகவும், பின்னர் அதை மீட்டதாகவும் பகிர்ந்து கொண்டார். "துபாயிலிருந்து சென்னைக்கு செல்லும் வழியில் டி3 முனையத்தில் எனது மடிக்கணினி பையை தொலைத்துவிட்டேன். மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தேன், 3 நாட்களுக்குள் சென்னை விமான நிலையத்தில் பையை பெற்றுக்கொண்டேன், துபாய் விமான நிலையம் மற்றும் எமிரேட்ஸ் சேவையின் தரத்தை நீங்கள் வெல்ல முடியாது," என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.