இன்றைய தினம் (பிப் 5) சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது, "என் தொகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது. அரசு நிலங்களை மீட்டு வேளாண், பொறியியல் கல்லூரிகள் அமைக்கபப்ட வேண்டும் என முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் உதவியாளர் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால், அது வதந்தி தான். தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக அரசியல் லாபியில் ஈடுபட்ட சிலர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடியால் இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கவோ அல்லது சிறப்பு முகாம்களில் அடைக்கவோ கூடாது என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் இரு தரப்பு மக்களுக்குமே வழிபாட்டு உரிமை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு.
குறிப்பாக, வன்னியர் சமூகத்தின் இடஒதுக்கீட்டிற்காக போராடிய 21 போராளிகளுக்கு மண்டபங்கள் கட்டியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் சில தமிழர்கள் சார்ந்த பிரச்சனைகளை விரிவாக பேசுவதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதனிடையே, வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரான சி.என். ராமமூர்த்தியும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து 21 தியாகிகளுக்கு மணிமண்டபங்கள் அமைத்ததற்கு நன்றி கூறினார்.
மேலும், வன்னியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சி.என். ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.