நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அதன்படி, கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகரும், அக்கட்சி தலைவருமான விஜய் கலந்து கொண்டார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளம் வந்த நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, தான் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். மேலும், அரசியலில் கால் பதித்ததால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் விளைவாக, வினோத் இயக்கத்தில் தனது கடைசி திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'ஜனநாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டில் தனது கொள்கைகள், கொள்கை தலைவர்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்பேரில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி. சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
அப்போது, "தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பார்போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும் அரசியல் வழிகாட்டிகளாய் ஏற்று செயல்பட போகிறோம்" என விஜய் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, கட்சியை பலப்படுத்தும் விதமாக பல்வேறு நிர்வாகிகளை புதிதாக நியமித்து விஜய் உத்தரவு பிறப்பித்தார். மேலும், அண்மையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்தித்து விஜய் உரையாற்றினார். அப்போது, தனது கள அரசியல் பரந்தூரில் இருந்து தொடங்குவதாக அவர் கூறினார். இது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்றைய தினம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களான வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் ஆகியோர் சிலைகளை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தையல் இயந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்கவுள்ளார்.