/indian-express-tamil/media/media_files/2025/08/24/tvk-tvk-2025-08-24-14-51-21.jpg)
மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய்யை காண, லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர்.
இந்த மாநாட்டிற்கு மொத்தம் 2500 ஆண் பவுன்சர்களும், 500 பெண் பவுன்சர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேடையில் யாரும் ஏறிவிடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், சில ரசிகர்கள் ஆர்வத்தால் கட்டுப்பாடுகளை மீறினர். "உங்கள் விஜய்… நான் வரேன்…" என்ற பாடலின் பின்னணி இசையோடு, விஜய் ரேம்ப் வாக் வந்தபோது, சில ரசிகர்கள் அத்துமீறியதால், பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஊழியர்களால் பலரும் தூக்கி தரையில் வீசப்பட்டனர். இதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத் குமார் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும், ஒருவர் ரேம்ப் மேடையிலிருந்து கீழே விழாமல் கம்பியைப் பிடித்து தொங்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இதுசம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சரத் குமாரின் என்பவரின் தாய், "என் பையன் திருச்சிக்கு வேலைக்கான இண்டர்வியூக்குப் போகிறேன் என்றுதான் வீட்டிலிருந்து சென்றான்.
மாநாட்டில் இருப்பதை நாங்கள் பின்னர்தான் அறிந்தோம். விஜய்யை பார்க்கும் ஆர்வத்தால் மேடையில் ஏறினான். பொறுமையுடன் அணுகியிருக்கலாம்..! பவுன்சர்கள் குப்பை மாதிரி தூக்கி வீசியது மிகவும் கொடுமை" என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார். ஒரு உயிரின் மதிப்பு விஜய்க்கு தெரியுமா? இப்பவே ரசிகர்களை பாதுகாக்க முடியவில்லையெனில், மக்களை எப்படி பாதுகாப்பார்? ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், முதலில் மனிதத்தன்மை இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.