நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை ஒட்டி அவரது கட்சியினரும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யும் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய் சீமானை மறைவாக விமர்சித்தார். மேலும், 'திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள்' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
விஜயின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த வார இறுதியில் பேசிய சீமான், விஜயை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் கொள்கை தெளிவாக இல்லை எனவும், " எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது.இது கொள்கை இல்லை. கூமுட்டை, அதுவும் அழுகின கூமுட்டை" என மிகக் கடுமையாக சாடியிருந்தார்.
சீமானின் இந்த விமர்சனத்திற்கு விஜய் தரப்பில் இருந்து பதில் எதுவும் கொடுக்கப்படவில்லை. அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்திலும், யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம் எனவும் ஆதாரப்பூர்வமாக பதில் விமர்சனங்களை முன்வைக்குமாறு விஜய், நிர்வாகிகளை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னையும், தனது கட்சியையும் சீமான் கடுமையாக தாக்கிப் பேசி இருந்தாலும் அவருக்கு விஜய் பிறந்த நாள் தெரிவித்து இருப்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“