தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இதன்பிறகு 10,12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 சட்டமன்ற தொகுதிவாரியாக முதல் மூன்று இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் பாராட்டு விழா நடத்தி விஜய் அவர்களை நேரில் கவுரவித்தும் வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தில் மாநாடு நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தான் கட்சி கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். பூமி பூஜைக்கு பின் மாநாட்டு திடலில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“