தமிழக முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்.. மோடியை சந்திப்பாரா?

இந்தக் கூட்டத்தில் பல மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (16.6.18) மாலை டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (17.6.18) நடைபெறுகிறது. ‘வளர்ந்த இந்தியா 2022’ என்ற கருத்தை மையப்படுத்தி இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6. 20 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் டெல்லி விரைகிறார். அங்கு அவரை தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் அதிமுக எம்பிக்கள் வரவேற்கின்றனர்.நிதி ஆயோக் கூட்டம் ராஷ்ட்ரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டமானது நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டம் முடிந்த பின்பு, பிரதமர் மோடியை சந்திக்கவும், முதல்வர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளார்.அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பிரதமரை சந்தித்து பேசவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் பிரதமரிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், அணைகள் பாதுகாப்புச் சட்டம், மாநில அரசுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள் குறித்தும் மனுவையும் முதல்வர் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்பு, நாளை இரவே முதல்வர் சென்னை திரும்புகிறார்.

×Close
×Close