பெண் மனைவியாகிவிட்டார் என்பதற்காக அவரது அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
கணவர் ஒருவர், தனது மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும், சுய இன்பத்தில் ஈடுபடுவதாகவும் கூறி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பதும், சுய இன்பத்தில் ஈடுபடுவதும் கணவரை கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது என்று தீர்ப்பளித்தது.
மேலும், தடை செய்யப்பட்ட வகையைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமாகாது என்றும், ஆபாசப் படங்களுக்கு அடிமையாவதுதான் தவறு என்றும் நீதிபதிகள் விளக்கமளித்தனர். மனுதாரர் தனது மனைவி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், அப்படியே நிரூபிக்கப்பட்டாலும், அவை சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்கள் அல்ல என்றும் நீதிபதிகள் கூறினர்.
ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில், பெண்கள் அதைச் செய்வதை குற்றமாகக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே, மனுதாரரின் விவாகரத்து மனுவை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு, பெண்களின் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது