த.வெ.க பிரச்சார துயர சம்பவம்; கரூர் விரையும் சிறப்பு புலனாய்வுக்குழு: சம்பவ இடத்தில் ஆய்வு செய்வதாக தகவல்

தற்போது சிறப்பு புலனாய்வுக்குழு இன்று கரூர் வருகிறது. பிரச்சாரம் நடந்த இடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று விசாரணையை துவக்குகின்றது.

தற்போது சிறப்பு புலனாய்வுக்குழு இன்று கரூர் வருகிறது. பிரச்சாரம் நடந்த இடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று விசாரணையை துவக்குகின்றது.

author-image
WebDesk
New Update
Vijay Karur stampede

Vijay Karur stampede

கரூர் த.வெ.க பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) இன்று மாலை கரூர் வருகிறது.

Advertisment

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் அன்றைய தினம் இரவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வந்து உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியை அறிவித்துச் சென்றார்.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அவர் சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், உயிரிழந்தர்கள் குடும்பங்களை சந்தித்து 2 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் கரூர் நகர போலீஸார் த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், மற்றொரு நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 112 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் திருச்சி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisment
Advertisements

இவ்வழக்கில் முதலில் விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி வி.செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவரை மாற்றிவிட்டு ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நேற்று முன்தினம் அமைத்தது. இதில் நாமக்கல் எஸ்.பி. உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்று முன்தினமே தயார் செய்யப்பட்ட நிலையில் ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன் கரூரில் இருந்து நேற்று சென்னை புறப்பட்டு சென்று ஐஜி அஸ்ரா கார்க்கிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார். வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சிபிசிஐடி எஸ்பி சியாமளா தேவி ஆகிய 2 பெண் எஸ்பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், இக்குழுவில் டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, ஆய்வாளர்கள் என 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவில் இடம்பெற்றுள்ள 2 பெண் எஸ்பிக்களும் நேற்று ஐஜி அஸ்ரா கார்க்குடன் ஆலோசனை நடத்தினர். தற்போது சிறப்பு புலனாய்வுக்குழு இன்று கரூர் வருகிறது. பிரச்சாரம் நடந்த இடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று விசாரணையை துவக்குகின்றது. சிறப்பு புலனாய்வுக்குழு கரூர் வருகையால தவெக நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்தப்புலனாய்வுக்குழுவின் அறிக்கையின்படி மேல் நடவடிக்கைகளை நீதிமன்றமும், அரசும் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

க.சண்முகவடிவேல்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: