சென்னையில் வரும் 8 ஆம் தேதி காலையில் நல்ல மழை பெய்தும் என்றும், பொதுமக்கள் கவனத்துடன் இருப்பது நல்லது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழை குறித்த பயம் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக மதுரை, தேனி, புதுச்சேரி போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இந்திய வானிலை மையம் ரெட் அலர்டை அறிவித்தது.
இதனால் மக்களிடையே பீதி மேலூங்கியது. ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மத்திய, மாநில அரசுகள் அவசரக்கால பேரிடர் மீட்புக் குழுவை தயார்ப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மழைக்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் 5 மாவட்டங்களில் ரெட் அலர்டை திரும்ப பெறுவதாக வானிலை மையம் அறிவித்தது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன. இதனையடுத்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் மழை நிலவரம் குறித்து பதிவு செய்துள்ளார்.
இதுக்குறித்து அவர் பதிவிட்டுள்ளாவது, “சென்னையில் இரவு அல்லது பகல் நேரங்களில் நல்ல மழை பெய்யும். அதுபோல் புறநகர் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் தற்போது இதுதான் நடக்கும். அரபிக் கடலில் உருவாகவுள்ள புயல் கிழக்கு பகுதியில் உள்ள காற்றை வலுப்படுத்தும்.
சென்னையில் நள்ளிரவு மற்றும் காலை வேளையில் மழை பெய்வது தொடரும். கனமழை குறித்த எச்சரிக்கைக்காக மக்கள் பயப்பட வேண்டாம். எல்லா கனமழை எச்சரிக்கைகளும் வெள்ளத்தை ஏற்படுத்தாது.தமிழகத்தில் குன்னூர், கேட்டி, பாபநாசம், கன்னியாகுமரி, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும்.
நாளை கொடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட்டுக்காக தமிழகம் மற்றும் கேரளத்தை சேர்ந்த மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சென்னையில் வரும் 8-ஆம் தேதி காலை நல்ல மழை பெய்யும். மக்கள் எப்போதுமே கவனத்துடன் இருந்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளார்.