ரஜினிகாந்த் மாநகராட்சிக்கு சொத்து வரி கட்ட மறுக்கிறார் என்று கூப்பாடு போட்டவர்கள் கவுதம் சிகாமணியின் சட்டத்திற்கு புறம்பான சொத்து விவகாரம் குறித்து கொஞ்சம் வாய் திறந்தால் நல்லது என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத் தலைவரும் பேச்சாளருமான தமிழருவின் மணியன், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் ஆலோசகராக உள்ளார். அரசியல் ரீதியாக ரஜினிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தாவில் உள்ள பி.டி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளார்.
அதே போல, ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்துள்ளார். பொன்முடி கலைஞர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருந்த போது இந்த முதலீடுகள் செய்யப்பட்டன என்பது நம் சிந்தனைக்குரியது.
அமலாக்கத்துறையின் விசாரணையைத் தொடர்ந்து, கவுதம் சிகாமணியின் ரூ.8.60 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகன் கௌதம் சிகாமணிக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்து சேர்ந்தது என்பது ஆய்வுக்கு உரியது. இந்த மோசடி 2008-ல் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இவரைத்தான் 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினார். சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சிகாமணி இன்று சட்டமியற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
தி.மு.கழகத்தின் தலைவர்கள் அனைவருமே அறத்திற்கு புறம்பாக சொத்துக்களை குவித்து எவ்வித உறுத்தலுமின்றி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள்தான். இவர்கள் அனைவருக்கும் மக்கள் நலன் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும்தான்.
ரஜினி மாநகராட்சிக்கு சொத்து வரி கட்ட மறுக்கிறார் என்று கூப்பாடு போட்டவர்கள் கவுதம் சிகாமணியின் சட்டத்திற்கு புறம்பான சொத்து விவகாரம் குறித்து கொஞ்சம் வாய் திறந்தால் நல்லது.
வழக்கப்படி இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பல்லவியை இவர்கள் பாடினால் பெரியார் சொன்னதுபோல் அறிவு நாணயம் இல்லாதவர்கள் என்ற முடிவிற்கே நாம் வரமுடியும். இன்று நமக்குள்ள ஒரே மாற்று மருந்து ரஜினியின் அரசியல் வருகை தான்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.