புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று காலை நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதற்கு வயது 32. யானையின் மறைவால் புதுச்சேரி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், யானை மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பகக்த்தில் வெளியிட்ட இரங்கல் செய்தி:
”நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். மணக்குள விநாயகர் திருக்கோவிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது. மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள்.

எங்களை எப்படி தேற்றிக்கொள்வதே என்று தெரியவில்லை லட்சுமி யானையை இழந்து வாடும் புதுவை மக்களுக்கும்,வெளியூரிலிருந்து வந்து அன்போடு பழகியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.