காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலை (ஏப்ரல் 9) காலமானார். இந்நிலையில் மருத்துவமனையில் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத தமிழிசை சவுந்தரராஜன் தனது தந்தையின் மறைவு குறித்து நா தழுதழுக்க உருக்கமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
"போய் வாருங்கள் அப்பா....அன்பீர் சிறந்தீர்! என்றுதான் ஆரம்பிப்பார்.
நான் வேறு இயக்கத்தை தேர்ந்து எடுத்தபோது சற்று கோபமாக இருந்தாலும் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என தந்தை எப்போதும் கூறுவார். அவரை பொறுத்த வரை நேர்மையான, பிடிப்பான அரசியலும் காமராஜரின் தொண்டன் என்பது தான் பெருமை என்றும் தன் தந்தை கூறுவார். எப்போதும் கதர் ஆடை தான் அணிவார். உள்ளாடை கூட கதரில் தான் அணிவார்.
முதல் முதலில் தமிழில் பாராளுமன்றத்தில் பேசியவர், 8 முறை பாதயாத்திரை சென்று இருக்கிறார். தமிழ் தான் என் தந்தையின் உயிர்மூச்சி... இறுதி காலத்தில் எங்களோடு தான் இருந்தார்.
தந்தையின் இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு தொடங்கி விருகம்பாக்கம் இடுகாட்டிற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறினார். என் தந்தையின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் பார்த்து பார்த்து வளர்ந்தவர் நான்” என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் தந்தையின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்...
குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்... அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக... தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு... தமிழிசை என்ற பெயர் வைத்து... இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது....
வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று... சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்... இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்... சீராக வாழ்வதைக் கண்டு... பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்... என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்....
மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்... நாங்கள் செய்வோம் என்று... உறுதியோடு... உங்களை வழி அனுப்புகிறோம்... உங்கள் வழி உங்கள் வழியில்...... நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்... நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்....