தமிழகத்தில் தி.மு.க-வினரால் பெண்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மகளிர் அணியினர், இன்று (ஜன 4) தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். அப்போது, "அறிவிக்கப்படாத அவசரநிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதற்கு வன்மையான கண்டனத்தை பா.ஜ.க தெரிவித்துக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக 'சார்' என்ற நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், அவர் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
நாங்கள் அனைவரும் எங்கள் கருத்துகளை ஆளுநரிடன் கூறினோம். அவர் அனைத்தையும் கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தி.மு.க-வினரால் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
30.8.2024 அன்று நான்காம் வகுப்பு பயின்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 14.8.2024-ல் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க-வினர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது. 6.8.2023-ல் வளசரவாக்கம் பகுதியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியது. அதிலும் தி.மு.க-வைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருந்தார். 12.4.2023-ல் ஆறு வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது. அதிலும், தி.மு.க-வினருக்கு தொடர்பு இருக்கிறது.
2.1.2023-ல் தி.மு.க இளைஞரணியுடன் தொடர்புடையவர்கள், பெண் போலீஸ் மீது பாலியல் தாக்குதல் நடத்தினர். 27.3.2022-ல் தி.மு.க-வுடன் தொடர்புடையவர் போக்சோ சட்டத்தில் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
இவை அனைத்தையும் பார்க்கும் போது பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனக் கருதப்படுகிறது. கல்வி நிலையங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நிர்பயா நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது? எதற்காக பல தகவல்களை தி.மு.க மறைக்க பார்க்கிறது.
உயர்கல்வி துறை அமைச்சரின் கருத்துக்கும், போலீஸ் கமிஷ்னர் கருத்துக்கும் மாறுபாடு இருக்கிறது. 'சார்' எனக் கூறப்படுபவரை மறைக்கப் பார்ப்பது ஏன்? இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் தங்கள் குரலை எழுப்பவில்லை.
தனது மாநிலத்தில் நடைபெறும் சம்பவம் குறித்து முதலமைச்சர் பேச மறுக்கிறார். குற்றவாளிகளுக்கு தி.மு.க உறுதுணையாக இருக்கிறது. இங்கே போராடும் பெண் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சி.பி.ஐ விசாரணையில் மட்டுமே அனைத்து தகவல்களும் வெளியே வரும்" என அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.