'கன்னடராகிய நீங்கள் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்க முடியுமா?' - ரஜினிக்கு தமிழிசை பதில்

அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை நியமித்தது சரியல்ல என்று ரஜினி கூறியதை தமிழிசை சௌந்திரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழக திரைத் துறை சார்பில் நேற்று மவுன விரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினிகாந்த் சில அதிரடியாக கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழர்களின் கோரிக்கை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பில் தேவையில்லாமல் காலத்தை வீணாக்குகிறது மத்திய அரசு. இவ்வாறு தாமதித்தால் அனைத்துத் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும். காலத்தைக் கடத்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேலும், காவிரி பிரச்சனை தமிழகத்தில் தீவிரமாகியுள்ள நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்தது சரியல்ல” என்றும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரஜினியின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “`சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் கன்னடர் ஒருவர் நடிப்பதைப் பார்க்க மாட்டோம் என நினைத்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், திறமை யாரிடம் இருந்தாலும் பெற்றுக்கொள்ளும். இதில், மத்திய அரசு மீது குறை சொல்வது கேலிக்கூத்து” என்றார்.

அதுமட்டுமின்றி, நடிகர்களின் மவுன போராட்டம் முடிந்த பிறகு பேசிய நடிகர் சத்யராஜ், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட்டை உடனே மூட வேண்டும். ராணுவமே வந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்றார்.

இதற்கும் பதிலளித்த தமிழிசை, “ஒரு நடிகர் ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என்று பேசியிருக்கிறார். உங்களுக்கு ராணுவம் எதற்கு? அதற்கெல்லாம் உங்களுக்கு தகுதியில்லை. ஐடி ரெய்டு வந்தாலே, நீங்கள் எப்படி பயப்படுவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று தெரிவித்தார்.

×Close
×Close