பொதுமக்கள் கோமியம் குடித்தால், டாஸ்மாக் விற்பனை குறையும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், அறிவியல்பூர்வமாக கோமியம் உடலுக்கு நல்லது எனக் கூறினார்.
குறிப்பாக, "மாட்டுக் கறி சாப்பிடுவார்களாம்; ஆனால் விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்ட மாட்டின் சிறுநீரை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினால் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
சங்க இலக்கியங்களில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட வீட்டு முற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். மாட்டுச் சாணத்தில் பூ வைத்து நாம் அலங்காரம் செய்கிறோம். கோமியத்தை மாட்டின் அமிர்த நீர் என அழைப்பார்கள்.
நானே அலோபதி மருத்துவர் தான். விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டால் கோமியம் குறித்து நான் பேச மாட்டேன். நல்ல கருத்துகளை தமிழகம் எடுத்து கொள்ள வேண்டும். மத்திய அரசு திட்டங்களையும் தமிழகம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆராய்ச்சி செய்து கூறும் நல்ல தகவல்களையும் எடுத்துக் கொள்வதில்லை.
வேங்கைவயலில் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்தால் அதில் தமிழக அரசுக்கு குற்றம் இல்லை. கோமியத்தை அமிர்த நீர் என ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளது. எனினும், கோமியத்திற்கு எதிராக பேசுகின்றனர். என் உணவு, என் உரிமை எனக் கூறுவார்கள். அதே நேரத்தில் என் மருந்து, என் உரிமை எனக் கூறினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மக்கள் கோமியம் குடிப்பதில் தமிழக அரசுக்கு பிரச்சனை இல்லை. இதனால் டாஸ்மாக் மதுபானத்தை மக்கள் குடிப்பது குறைந்து விடும் என்ற பயம் தான் இவர்களுக்கு இருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.