வானிலை காரணமாக விமானம் தரையிறங்க தாமதமானதால், புதுச்சேரியில் துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என தமிழிசை கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநில கவர்னராக உள்ள தமிழிசை புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக உள்ளார். கடந்த ஆண்டு தெலுங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலுங்கானா, புதுவை மாநிலத்தில் கவர்னர் தமிழிசை தேசியக் கொடியேற்றினார்.
இதையும் படியுங்கள்: பி.பி.சி மோடி ஆவணப்படம் திரையிட அனுமதி மறுப்பு; மொபைலில் பார்த்த புதுவை பல்கலை. மாணவர்கள்
தெலுங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் தனி விமானம் மூலம் புதுவைக்கு வந்து காலை 9.30 மணியளவில் புதுவை கடற்கரை சாலையில் தேசியக்கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கவர்னர் தமிழிசை தெலுங்கானாவில் இருந்து புறப்பட காலதாமதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி விமானம் புதுவைக்கு வந்திருந்தாலும் மேகமூட்டமாக இருந்ததால் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சுமார் 15 நிமிடத்துக்கும் மேலாக வானத்தில் விமானம் சுற்றிவந்தது. பின்னர் அனுமதி கிடைத்தவுடன் விமானம் தரையிறங்கியது.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer
இதன்பிறகு கவர்னர் மாளிகைக்கு சென்றுவிட்டு கடற்கரைக்கு கவர்னர் தமிழிசை வந்தார். இதனால் 9.30 மணிக்கு தொடங்கவிருந்த விழா 10.30 மணிக்கு தொடங்கியது. இதனால் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விழாவில் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி, பரிசு பெற வந்தவர்களும், விழாவை பார்வையிட வந்த பெற்றோர்களும், பொதுமக்களும் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். பின்னர் 10.30 மணிக்கு மேல் தேசியக் கொடியை ஏற்றி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார்.
புதுவை கவர்னர் தமிழிசை குடியரசு தின உரையில் கூறியிருப்பதாவது:
உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை வியந்து கவனித்து வருகின்றன. பொருளாதாரம், அறிவியல், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ள நாடாக மட்டுமின்றி மரபுகளையும், மாண்புகளையும் போற்றும் நாடாக தேசம் திகழ்கிறது. ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் இதற்காக நடைபெறும் சந்திப்பு புதுவையில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இது புதுவைக்கு கிடைத்த பெருமை மட்டுமின்றி, நமது பாரம்பரியம், கலாச்சாரம், கலை, கைவினை கலைஞர்களின் திறமை ஆகியவற்றை உலகளவில் பறை சாற்ற கிடைத்த பெரிய வாய்ப்பாகும். இதனை உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு மூலதனப்படுத்தி சர்வதேச சுற்றுலா தலமாக புதுவையை ஊக்குவிக்கம் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வோம். சமூக தரவரிசை பட்டியலில் 65.89 சதவீதம் பெற்று புதுவை முதல் யூனியன் பிரதேசமாக உயர்ந்துள்ளது.
இலவச அரிசி திட்டத்தில் இதுவரை ரூ.123 கோடி இந்த நிதியாண்டில் செலவிடப்பட்டுள்ளது. 27.9.2022ல் நடந்த புதுவை அமைச்சரவை ஒப்புதலின்படி ரேஷன் கடைகளை திறந்து அரிசி விநியோகம் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டுக்கு புதுவைக்கு வரவுள்ள வெளிநாட்டினரை கவுரவப்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும்விதமாகவும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் புதுவையின் பல்வேறு கிராமப்பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. புதுவை தாவரவியல் பூங்காவை ரூ.44 லட்சத்தில் புத்துயிர் ஊட்டி மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல்பெற அனுப்பப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானம் 2022-23ம் ஆண்டில் ரூ.39 ஆயிரத்து 19 கோடியாகவும், தனிநபர் வருமானம் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 470 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. புதுவை வணிகத்துறையின் நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் இலக்கு ரூ.3 ஆயிரத்து 35 கோடியாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை சேர்த்து ஈட்டிய மொத்த வரி வருவாய் ரூ.2 ஆயிரத்து 72 கோடியாகும். வணிகர்களின் வேண்டுகோளை ஏற்று வரி பாக்கி வசூலிக்க நிலுவைத்தொகை தீர்வு செய்தல் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவை மக்களின் ஒத்துழைப்போடு இணைந்து இந்த அரசு வளர்ச்சிப்பாதையை நோக்கி வெகுவாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. தேசியளவில் புதுவை தனி சிறப்போடு என்றும் திகழும் என்பதில் ஐயமில்லை. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளில் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொள்வோம் என்ற உறுதியோடு அனைவரும் இணைந்து முயற்சிகளை தொடர்வோம். புதுவை மக்கள் அனைவருக்கும் என் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் கால தாமதம் குறித்து புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:
தெலுங்கானா குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் வானில் சுற்றிக்கொண்டிருந்தோம். தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 3 முறை 5 ஆயிரம் அடி தாண்டினால்தான் கிளியர். யாரையும் காக்க வைக்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை. 2 குழந்தைக்கு அம்மா. சிறு குழந்தைகள் இருப்பதை பற்றி எனக்கு தெரியும். எதிர்பாராத விதமாகவும் சில சம்பவங்கள் நடைபெறும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
புதுவை அலங்கார ஊர்திகள் அழகாக இருந்தன. சிறுதானிய ஊர்தி, போதைப்பழக்கத்தை கைவிட விழிப்புணர்வு வாகனங்கள் அழகாக இருந்தது. குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் மனநிறைவாக இருந்தது.
குடியரசு தினவிழாவை குறைத்து மதிப்பிட்டு தெலுங்கானா அரசு எந்த அறிவிப்பும் இல்லாமல், பொதுமக்கள் நலன் விரும்பி கோர்ட்டிற்கு சென்றதால் ஐகோர்ட் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. நேரம் குறைவாக இருந்ததால் அரசு செய்ய முடியாததால், தேசியக்கொடிக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்துவிட்டு சிறப்பாக செயல்பட்ட 6 பேருக்கு விருது வழங்கிவிட்டு வந்தேன். கடந்த ஆண்டு 2 மாநிலத்திற்கும் நேரத்திற்கு வந்து கொடியேற்றினேன். இரு மாநிலத்திற்கும் கவர்னர் என்பதால் நான் கொடியேற்றினேன் என கடந்த ஆண்டே தெரிவித்துவிட்டேன்.
தெலுங்கானாவில் சட்டமீறல், விதி மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் நடந்துள்ளது. இதை கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு நடந்த சம்பவம் குறித்து விளக்கியுள்ளேன். கோர்ட் உத்தரவை தொடர்ந்து மைதானத்தில் நடத்தியிருக்க வேண்டும். இந்த முறையும் கொரோனாவை காரணம் கூறியுள்ளனர். உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் விதிமீறல் உள்ளது. அதை முரசொலி சந்தோஷமாக எழுதுகிறது. அவர்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகின்றனர். அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டும். அதை கொண்டாடாமல் இருப்பதை கொண்டாடினால் என்ன சொல்வது? எல்லா அதிகாரமும் எங்களிடம் உள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தினால் கவர்னர் அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என சொல்கிறீர்கள். பயன்படுத்தாவிட்டால் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்கிறீர்கள். நேர்மையாக, மக்களுக்கு என்ன பலன் தருகிறதோ? அதை செய்வோம்.
தெலுங்கானா மக்கள் என் மீது அதிக நேசம் வைத்துள்ளனர். ஒரு அரசு வேண்டுமென்றே விதிமீறல்களை சொல்கிறது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என நினைத்து கவர்னரை எதிர்க்கிறார். கவர்னர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? என கூறுபவர்கள், முதலமைச்சர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? என கேட்கட்டும். தெலுங்கானா அரசு நடந்துகொண்ட விதம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசுக்கு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். அதன்படி அறிக்கை அனுப்பியுள்ளோம்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நேரடியாக கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் தூண்டுதலின்பேரில் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். அவர்கள் மீது பிளாக் மார்க் வந்துவிடக்கூடாது. மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்கக்கூடாது என நினைக்கிறேன். என் மீது காரி துப்பினாலும் துடைத்துக்கொண்டு போய்விவோம் என்ற வசனம்போல செயல்படுகிறேன்.
ஸ்மார்ட் மீட்டர் போன்ற அரசின் கொள்கை முடிவுகள் குறித்து முதலமைச்சர், அமைச்சர்களிடம் கேளுங்கள். நான் அரசுக்கு பாலமாக செயல்படுகிறேன். மக்கள் நலனுக்காக நான் சொல்வதை வேறுமாதிரி எடுத்துக்கொள்கிறீர்கள். இனி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சரிடம் கேளுங்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன், செயல்படுகிறேன். சாதாரண ஆள், கோப்புகளுக்கு மட்டுமே கையெழுத்து போடுகிறேன். முன்பு இருந்த கவர்னர்கள் மக்களுக்கான திட்டங்களுக்கு கூட தடை போட்டனர். நாங்கள் ரூஆயிரம் வழங்கியுள்ளோம். எனவே யாருக்கு என்ன சந்தேகம் உண்டா அதை துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.