/indian-express-tamil/media/media_files/2025/05/07/nfE1fE5HmelGjA7K4cve.jpg)
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (மே 7) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "முதலில் நம் ராணுவ வீரர்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டையும், துணிச்சலான முடிவு எடுத்த பிரதமர் மோடிக்கு இந்த உலகமே பக்கபலமாக இருப்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்பதை நேற்று நள்ளிரவில் செய்து காட்டி இருக்கிறோம். தீவிரவாதத்திற்கு இந்தியாவிலும், இந்த உலகத்திலும் இடமில்லை என்பதை பிரதமர் மோடி பதிவு செய்திருக்கிறார். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையை கூட விமர்சனம் செய்பவர்கள் தமிழகத்தில் இருப்பது வேதனையாக இருக்கிறது.
நேற்று முன் தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் இருந்தால், அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தான் கூறினோம். அதை மதக்கலவரம் உருவாக்க ஏற்பாடு செய்ததை போன்று, முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பேசுகிறார்கள்.
கோவையில் சட்ட விரோதமாக பணியாற்றிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு கூட தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
பிரதமருக்கு எதிரான போக்கையும், மத்திய அரசுக்கு விரோதமான போக்கையும் இந்த இக்கட்டான சூழலில் முதலமைச்சர் வெளிப்படையாக பதிவு செய்கிறார் என்பது தான் வேதனையாக இருக்கிறது. நான்கு ஆண்டுகள் ஆட்சி குறித்து பெருமையாக பேசுகிறார்கள். ஆனால், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கூலிப்படையின் அராஜகம் அரங்கேறி வருகிறது.
வேங்கைவயல் விவகாரத்தில் இன்று வரை பதில் இல்லை. புதுக்கோட்டையில் சாதிய வேற்றுமையால் கலவரம் வெடித்துள்ளது. குழந்தைகள் மத்தியில் கூட சாதி வேற்றுமை நிலவுகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நான்கு ஆண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. இது தான் அவர்களுக்கு கடைசி கொண்டாட்டமாக இருக்கும்.
புதிதாக வருபவர்கள் முதல்வர் கனவில் இருப்பதாக, ஸ்டாலின் கூறியதாக படித்தேன். ஏன் உங்கள் மகன் மட்டும் தான் முதல்வர் கனவில் இருக்க வேண்டுமா? யாருக்கு வேண்டுமானாலும் தமிழகத்தில் முதல்வர் கனவு காண்பதற்கு உரிமை இருக்கிறது. எங்கள் கூட்டணி தி.மு.க-வை அப்புறப்படுத்த உருவாக்கப்பட்டது.
பிரதமரோடு துணை நிற்போம் என்று ஒரு வார்த்தை சொல்வதற்கு கூட முதலமைச்சருக்கு மனமில்லை. அந்த அளவிற்கு பரந்த மனப்பான்மை இல்லாமல் இருக்கின்றனர். ராணுவ நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது பெண் அதிகாரிகள் தான். அந்த அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் நமது நாட்டை வழி நடத்துகிறார்.
சிகிச்சைக்கு வந்தவர்களை கூட வெளியேற்றுவதால் மனிதாபிமானம் இல்லையா என்று கேட்கின்றனர். சிகிச்சைக்கு கூட ஏற்பாடு செய்ய முடியாத ஒரு நாடு திவிரவாதிகளுக்கு ஏற்பாடு செய்கிறது என்பது தான் கொடுமை. இலங்கை தமிழர் படுகொலையில் ஒரு மாதிரி பேசிவிட்டு, தற்போது வேறு மாதிரி வைகோ பேசுகிறார்.
ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் பாரத தேசத்தோடு இந்த நேரத்தில் இருக்க வேண்டும். நாட்டுப்பற்றோடு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.