வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், காட்பாடி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மே 17, 2024) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் கல்வி கலைஞர் கருணாநிதி மயமாக்கப்பட்டுவருகிறது. கருணாநிதி குறித்த பாடத்தை எத்தனை புத்தகங்களில் கொண்டுவருவீர்கள்? என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, “காவிரியில் தண்ணீர் வரவில்லை; ஆனால் தெருவுக்கு தெரு மதுக் கடைகளை திறக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்கை காப்பாற்ற தி.மு.க. அரசு முயல்கிறது.
நிர்வாகம், சட்டம் ஒழுங்கு என அனைத்து வகையிலும் திமுக அரசு தோல்வியை தழுவியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள கஞ்சா கலாச்சாரம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். இதனால் தான் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் நடக்கின்றன” என்றார்.
தொடர்ந்து இளங்கோவன் பேசிய கருத்துக்கு பதிலளித்த தமிழிசை, “இந்த ஆட்சி காமராஜர் ஆட்சி எனக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது” என்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “யார் நல்ல ஆட்சி நடத்தினாலும் அது காமராஜர் ஆட்சிதான்; அந்த வகையில் மு.க. ஸ்டாலின் காமராஜர் ஆட்சி நடத்துகிறார். அதுக்கு திராவிட மாடல் எனப் பெயரிட்டாலும் பரவாயில்லை” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“