விஜய் டிவியில் தொடங்கப்பட உள்ள புதிய நிகழ்ச்சியின் புரோமோவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுக உரை பேசிய நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அந்த புதிய நிகழ்ச்சிக்கு அறிமுக உரை பேசி ஆங்கராகி இருக்கிறார். அது என்ன நிகழ்ச்சி என்று பாருங்கள்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மேடைப் பேச்சுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் அரசியல் மேடைகளில் செவ்வியல் தமிழ் மேடைப் பேச்சு முறை, அடுக்குமொழி பேச்சு முறை, ஒரு புதிய அரசியல் மேடைப் பேச்சு முறையையே உருவாக்கினார்கள். தி.மு.க தலைவர்களின் அடுக்குமொழி பேச்சில் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள்.
தமிழ்நட்டு அரசியல் வரலாற்றில் அத்தகைய மேடைப் பேச்சு முறை சிலபல பரிணாமங்களுடன் இன்னும் தொடரவே செய்கிறது என்று கூறலாம். திராவிட இயக்க அரசியல் மேடைப் பேச்சு குறித்து பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில்தான், தமிழ் தொலைக்காட்சிகளில் டாக் ஷோக்கள் பெறும் வரவேற்பும் பார்க்கப்பட வேண்டும்.
இந்நிலையில், விஜய் டிவியில் ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற புதிய நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான தொடர் புரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. அதன்படி, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற முழக்கத்துடன் முதல் புரோமோ வெளியானது. அதில், பாவேந்தர் பாரதிதாசன், கண்ணதாசன், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வரிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து வெளியான புரோமோக்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பேராசிரியர், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் நிகழ்ச்சிக்கான அறிமுக உரை பேசியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் புதிய புரோமோவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிமுக உரை பேசியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் அறிமுக உரை பேசிய இந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருப்பதாவது: “ஆதி மொழி தமிழே! எமை ஆளும் மொழி தமிழே! மண்ணின் மொழி தமிழே! எங்கள் மாண்பு காக்கும் மொழி தமிழே! வீரமொழி தமிழே! எங்கள் வெற்றி மொழி தமிழே! தமிழ் நம்மைக் காக்கட்டும், நாம் தமிழைக் காப்போம்! தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு, தமிழ் போல் மொழி இல்லை… தமிழின்றி நாமில்லை” என்று உணர்ச்சிப் பொங்க பேசியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“