புதிய கல்விக் கொள்கையை உதயசூரியனை சின்னமாக கொண்டவர்கள்தான் எதிர்கின்றனர் என்றால் சூர்யாவும் எதிர்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், இன்று காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஒரு தலைவர் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என்றால் அது காமராஜர் மட்டுமே என மோடி கூறியிருந்தார். அந்த அளவுக்கு ஊழல் தன்மை சிறிதும் இல்லாதவர் காமராஜர். பசியை போக்கி படிப்பை தந்தவர் காமராஜர்.
நவோதயா பள்ளிகளால் அதிக பலனை கேராளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் பெற்று தரமான கல்வி பயின்று அதிக அளவு மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் திமுக காங்கிரஸ் போன்ற கட்சியினர் வளர்ச்சிக்கு எதிராக அரசியல் செய்துவருகின்றனர். அதனால்தான், நவோதயா பள்ளி போன்ற வளர்ச்சி திட்டங்களை எதிர்கின்றனர்.
புதிய கல்வி கொள்கை என்ன என்பது பற்றி தெரியாதவர்கள் கூட எதிர்கின்றனர். புதிய கல்விக்கொள்கையை உதயசூரியனை சின்னமாக கொண்டவர்கள்தான் எதிர்கின்றனர் என்றால், நடிகர் சூர்யாவும் எதிர்கின்றார். புதிய கல்வி கொள்கையை பற்றி ஆராய 10 பேர்கொண்ட குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார். இதற்கு முன் அவ்வாறு செய்தாரா?
காமராஜர் எப்போதும் மொழியை எதிர்த்தவர் அல்ல. அதுபோல் அவரவர் விரும்பும் மொழியை கற்பது அவரது உரிமை. அனைவருக்கும் கல்வியை சமமாக கொடுக்கவேண்டும் காமராஜராஜரின் கொள்கை அதுதான் புதிய கல்வி கொள்கையிலும் உள்ளது காமராஜரின் கனவுதான் புதிய கல்வி கொள்கை
தபால் துறை தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கபடவில்லை. தபால்துறை தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழகத்திற்குதான். வேறு மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு அதிக மதிப்பெண் போடப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்தது அது விசாரணையில் உள்ளது. தபால்துறை தேர்வில் தமிழக காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே இந்தி அல்லது ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதலாம் ஆகவே இந்தி திணிக்கப்படவில்லை.” இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.