தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும் என்றும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது என்றும் இந்துத்துவா தலைவரான, அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பா.ஜ.க நிரப்புகிறது என்றும் தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க-வின் முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் என்றும், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) பேசுகையில், "ஜெயலலிதா (Jeyalalitha) இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். அவர் இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கரசேவையை காரணம்காட்டி பா.ஜ.க ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர்.
ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். அவரை அ.தி.மு.க-வினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார். அவர் பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், நல்ல நேரம் பார்த்து தான் வேட்புமனு தாக்கல் செய்வார்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“