புதுவை கவர்னர் மாளிகையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்தார் விருந்து நடத்த வேண்டும் என காரைக்கால் மாவட்ட தி.மு.க அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் புதுவை கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாரம்பரியமாக புதுவை கவர்னர் மாளிகையில் நடைபெற்று வந்த இப்தார் விருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை நடத்தி மத நல்லிணக்கத்தை நிலை நாட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் உலா வருகிறது. அந்த பதிவு உண்மைக்கு மாறான கருத்தை முன்வைக்கிறது.
கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு நடத்தும் கோப்புக்கு கடந்த 11ந் தேதி கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். வரும் 19ம் தேதி கவர்னர் மாளிகையில் இப்தார் விருந்து நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும், இஸ்லாமிய பெருமக்களை கௌரவிக்கும் விதமாகவும் கவர்னர் மாளிகையில் இப்தார் விருந்து நடத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.
இது யாருடைய வற்புறுத்தலின் பெயரிலோ அல்லது அழுத்தத்தின் பெயரிலோ நடத்தப்படவில்லை. விருந்து நடத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் உலா வரும் பதிவு அர்த்தமற்றது என தெளிவுபடுத்தப்படுகிறது.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"