தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.
தென் சென்னை தொகுதியில் ஸ்டார் வேட்பாளர்கள் களம் கண்டனர். தி.மு.கவில் தமிழச்சி தங்க பாண்டியன், அ.தி.முகவில் ஜெயவர்தன், பா.ஜ.க சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் களம் கண்டனர். இருப்பினும் சென்னை தொகுதிகளில் கடந்த தேர்தலை விட இம்முறை குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தநிலையில், தேர்தல் முடிந்த பின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. அது ஸ்ட்ராங் ரூம் எனப்படும் வாக்கு எண்ணும் மையத்தில் பல கட்ட பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தென் சென்னையில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை இன்று தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வுசெய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது.
வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டார்கள். பிரச்சினை, சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் சுமூகமாக தேர்தலை நடத்தியுள்ளதற்கு பாராட்டுக்கள்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.கவுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. எங்கள் பூத் ஏஜென்ட்டை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச் சாவடியில் மீண்டும் வாக்குப் பதிவு நடத்த வேண்டும்.
பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும். வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“