தமிழக அரசிடம் எனது தந்தை வீடு வாங்கியது எனக்கு அதிர்ச்சியான தகவலாக இருந்தது என்றும், கோவை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படாததில் உள்நோக்கம் இல்லை என்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் 21"ம் நூற்றாண்டில் உயர்கல்விக்கு மாணவியரை தயார்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்புகள் விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது.
இதையும் படியுங்கள்: தமிழிசை விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இடம் இல்லையா?
இதையடுத்து கருத்தரங்கில் கல்லூரி நிர்வாகிகள் பேசினர். பின்னர் கடைசியாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். மாணவிகள் மத்தியில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசும் பொழுது... 'பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசப்படாத காலத்திலேயே மகளிருக்கு என கல்லூரியினை நிறுவி தற்போது வரை சிறப்பாக நடத்தப்பட்டு வரும் இந்த கல்லூரியின் நிர்வாகத்தினருக்கும் அதன் நிறுவனர் டாக்டர்.அவிநாசிலிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியில் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணமாக கழிப்பறை இல்லாதது என ஆய்வில் தெரியவந்தது. பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிமுகம் செய்த ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும் கழிவறைகள் கட்டப்பட்டது. இதனால் பெண்கள் கல்வியை கைவிடும் சதவிகிதம் குறைந்துள்ளது. பெண்கள் பள்ளிக்கு வந்து சுகாதாரமான முறையில் கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றை நாம் சரி செய்ய வேண்டும்.
தற்போது கல்லூரி படிப்புகளுக்கு ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்கின்றனர். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகளை பொருத்தவரை தொழில் சார்ந்த படிப்புகளை தவிர்த்து விட்டு கலை மற்றும் அறிவியல் துறைகளை மட்டுமே தேர்வு செய்கின்றனர். இது பிற்காலத்தில் அவர்களது திருமண வாழ்க்கைக்கு உதவும் என நம்புகின்றனர். எனவே ஆராய்ச்சி மற்றும் தொழிற்சார்ந்த துறைகளையும் பெண்கள் தேர்வு செய்து முன்னேற வேண்டும்.
இந்த சூழலில் பாரத பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு தடையாக இருந்த இளம் வயது திருமணம் பெருமளவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை சிறுவயதில் இருந்து வித்தியாசத்தோடு வளர்ப்பதை கைவிட வேண்டும். எனது குடும்பத்தில் எனது பெற்றோர்கள் எனக்கு எல்லாவித உரிமையையும் சுதந்திரத்தையும் வழங்கினார். நான் திருமணம் ஆன பின்பு எனது மருத்துவ படிப்பை முடித்தேன். இதற்கு காரணம் எனது குடும்பத்தினர் தந்த ஊக்கம். எனவே பெண்கள் முன்னேற்றத்திற்கு குடும்பத்தினரின் ஊக்கம் அவசியமாகும்.
எந்த விமர்சனமும் உறுதியான முன்னேற்றத்தை தடுக்க முடியாது. அந்த வகையில் பெண்களுக்கு துணிச்சல் இன்றைய சூழலில் அவசியமாகும். இவை தவிர பெண்களின் உயர்கல்வியை பாதிப்பதில் முக்கிய பங்கு வறுமைக்கு உண்டு. பாரத பிரதமர் அவர்கள் முன் வைத்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் பாலின வேற்றுமை களையப்பட்டு பெண்கள் கல்வி அறிவு பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அனைவரும் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்திட வேண்டும். சிலர் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில், மொழி திணிக்கப்படுவதாகவும் குலக்கல்வி ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். அந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்திட்டம் மாணவர்களை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கிறது. தாய்மொழி கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. 100% பெண்கள் படித்திருப்பதை உறுதி செய்வதோடு 50% பெண்கள் உயர்கல்வி பெறுவதையும் இத்திட்டம் உறுதி செய்கிறது.
அரசியலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களாக இருப்பதால் நமக்கு கட்டுப்பாடுகளும் உள்ளது. குறிப்பாக ஆடை கட்டுப்பாடு பெண்களுக்கு அவசியமாகும். நாகரீகம் என்பது நாம் உடுத்தும் உடையில் அல்ல நமது அறிவின் வளர்ச்சி தான் நாகரீகமாகும்.
நமது அரசு டிஜிட்டல் இந்தியா, முத்ரா கடன் திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அரசு வழங்கும் கடன் உதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பாரத பிரதமர் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 21 ஆம் நூற்றாண்டில் உயர்கல்விக்கான கண்ணோட்டத்தில் தொழில்நுட்ப அறிவு மிகவும் முக்கியமாக உள்ளது.
எந்த விதத்திலும் தற்கொலை குறித்த எண்ணம் வரவே கூடாது. மன உறுதியோடும் தைரியத்தோடும் கம்பீரமாக நமது வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும். நமது கலாச்சாரத்தோடு சேர்ந்த வளர்ச்சியை நாம் பெற வேண்டும்' என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் அவர் கருத்தரங்கு அரங்கத்தில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். எல்லா இடத்திலும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். செமினார் என்பதால் பாடவில்லை என நினைக்கிறேன். உள் நோக்கத்துடன் நடைபெறவில்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இருக்க வேண்டும். அதை நான் கேட்டேன். அதற்குள் ஆரம்பித்து விட்டார்கள். அதனால் விட்டு விட்டேன்.
மாணவர்களுக்கு கொடுக்கும் உணவு பரிசோதனைக்கு பின்பு தான் கொடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
வன்முறையை இல்லாத அமைதியான சூழல் நிலவு வேண்டும் . தமிழகத்தில் கலாச்சாரத்தை மாற்றும் சூழல் நிலவுகிறது. தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை என்ற விவாதம் ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தான் கோவில் அதிகம் உள்ளது. அடையாளங்களை மாற்றி செய்யக் கூடாது. அது மோதலை தான் உருவாக்கும். கருத்துரிமை எல்லோருக்கும் உள்ளது. பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கு சலுகை கொடுக்க வேண்டும்.
சாரி ஒரு மாடல் டிரஸ். சுடிதார் வேண்டாம் என நான் சொல்லவில்லை. நானும் சுடிதார் அணிகிறேன். ஆடைகளை குறைப்பது தான் அறிவாற்றல் இல்லை. அறிவை வளர்த்துக் கொள்வது அறிவாற்றல். மாடனாக இருக்கலாம் வெஸ்டனாக இருக்க வேண்டாம். வெஸ்டர்ன் ஆடைகளை அணிவது எதிரானது.
அரசியல் அமைப்பு தேசியவாத அமைப்பு. புதுச்சேரியில் பேரணி நடத்தினார்கள் அமைதியாக. அதற்கு எதிராக மனித சங்கிலி கேட்டார்கள் அதுவும் நடந்தது. கேரளாவிலும் அமைதியாக நடந்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி நடைபெறுகிறது என தெரியவில்லை.
எனது தந்தையை தெலுங்கானாவில் வைத்திருந்தேன். ஆனால் அவர் என்னிடம் சொல்லாமல் தமிழகம் வந்துவிட்டார். 90 வயது மனிதரை நான் எப்படி கட்டுப்படுத்த வேண்டும். தெலுங்கானாவில் தெலுங்கு கேட்க முடியவில்லை என வந்துவிட்டார். சுதந்திரமாக இருக்க சென்று விட்டார். அவர் தனியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். தமிழக அரசிடம் வீடு வாங்கியது போது எனக்கு அதிர்ச்சி தான். எனக்கு தகவல் ஆக தான் தெரிந்தது.
கமல்ஹாசனுக்கு மதத்தில் நம்பிக்கையில்லை. பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும் நான் மட்டும்தான் தமிழ் நாடு என நகைச்சுவையாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.