கோவையில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டி.ஐ.ஜி மரணம் அதிர்ச்சியாக உள்ளது. காவலர்கள் விழாக்கள் காலத்திலும் பணி புரிகின்றனர். அவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். காவலர்கள் சங்கம் வைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை நியாயங்களை ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். அரசியல் அழுத்தமும் காவல்துறையில் உள்ளது.
அவர்களை சுதந்திரமாக பணியாற்ற விடுவதில்லை. அவர் மரணம் இதில் பாடத்தை சொல்கிறது. ஆனால் தற்கொலை ஒன்றே தீர்வு கிடையாது. சங்கம் தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்கலாம்.
தற்கொலை செய்வதற்கு ஏதோ ஒரு அழுத்தமான காரணம் தூண்டுதல் உள்ளது. அதை கண்டுபிடிக்க வேண்டும். நோய் என்று கடந்து விட முடியாது. இவ்வளவு உயர் அதிகாரி தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் கடந்து போவதை விட்டுவிட்டு கடைந்து ஆராய்ந்து ஏன் இந்த சூழ்நிலை நிலவுகிறது என்பதை அறிய வேண்டும். வாழ்க்கையில் பிளசர் இருக்க வேண்டும் பிரஷர் இருக்கக் கூடாது. நானே இரண்டு மாநிலங்களில் பிரசர்களை கடந்து தான் செல்கிறேன்.
ஆளுநர் என்பது போஸ்ட் அதை போஸ்டர் ஒட்டி கண்டிக்கக் கூடாது. அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உண்டு. ஆளாளுக்கு அரசியல் பேசும் பொழுது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது. போஸ்டர் ஒட்டி கருப்புக் கொடிகாட்டி செய்வது சரியான அரசியலாக இருக்க முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் பேச உரிமை இருக்கும்பொழுது ஆளுநருக்கும் உள்ளது" என்று கூறினார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர்கள் அரசியல் பேசக் கூடாது என தெரிவித்த கருத்து குறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்ட நிலையில், நான் தெரிவிக்கும் கருத்து அண்ணாமலைக்கு இல்லை. ஆளாளுக்கு பேசும் பொழுது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது என்பது தான் என்னுடைய ஜென்ரல் ஸ்டேட்மென்ட்.
அண்ணாமலை கருத்தை அண்ணாமலை இடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஆளுநர்கள் அரசியல் பேசலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளேன்.
ஹோட்டல்களில் அரசியல் பேசக் கூடாது என எழுதி இருப்பார்கள், ஆனால் அதற்கு கீழ் உட்கார்ந்து தான் அரசியல் பேசுவார்கள். அரசியல் இல்லாமல் ஒரு நொடியும் கிடையாது. கட்சித் தலைவர் போல ஆட்சித் தலைவர்கள் ஆளுநர்கள் அவர்களும் பேசலாம். ஆளுநர்கள் கருத்தை சொல்லலாம் உடன்பாடு இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட்டு போங்கள். உங்கள் மனநிலையில் தான் ஆளுநர் பேச வேண்டும் என நினைக்க கூடாது. நான் தமிழ்நாடு ஆளுநரை பற்றி பேசவில்லை என்னைப் பற்றி பேசுகிறேன். ஆளாளுக்கு பேசும் போது ஆளுநர் பேசினால் என்ன தப்பு.
புதுச்சேரியில் இதற்கு முன் முதல்வரும்- ஆளுனரும் எலியும் பூனையுமாக இருந்தனர். இப்போது அண்ணன் தங்கையாக இணக்கமாக உள்ளோம். இது எதிர்க்கட்சிக்கு ஆதங்கமாக உள்ளது. புதுச்சேரி புதுமையான வளர்ச்சியை அடைந்து வருகிறது என்று கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“