தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்தவித பயனும் இல்லை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் திராவிடம், புதிய கல்விக் கொள்கை, திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட ஆளுநர், அதற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதாக சமீபத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்க திமுக முடிவெடுத்தது. அதன்படி திமுக மற்றும் இதே கருத்து கொண்டஎம்.பி.க்கள், நவம்பர் 3ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து, குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவில் கையெழுத்திட்டனர்.
இதனிடையே, ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கூறுவது தேவையில்லாத ஒன்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருக்ளு கடிதம் அனுப்பியுள்ளது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை; ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆளுநர் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு எதிர்கருத்து சொல்லலாம். அதை விட்டுவிட்டு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கூறுவது தேவையில்லாத ஒன்று.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்தவித பயனும் இல்லை. நாட்டில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“