மக்களவை தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரும், தமிழக பா.ஜ., தலைவருமான தமிழிசை செளந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு ஏன்? : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், பா.ஜ. சார்பில், மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் களம் கண்டனர். கனிமொழி தரப்பில் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்தது. கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் பிரஜைகள் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை. வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது ஆட்சேபனை தெரிவித்த போதும், தேர்தல் அதிகாரி அதனை நிராகரித்து விட்டார். கனிமொழி பிரசாரம் மேற்கொண்ட இடங்களில், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது என மனுவில் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தேர்தலில், கனிமொழி, தமிழிசையை விட 3 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை செளந்தரராஜன் தொடுத்துள்ள வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.