Advertisment

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்; ஸ்டாலின் அறிவிப்புக்கு தமிழிசை பாராட்டு

சின்ன பையனை எதற்கு அமைச்சர் ஆக்கினீர்கள். மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் உதயநிதிக்கு பெருமை சேர்க்க நினைத்து சிறுமை சேர்த்து இருக்கிறார்; கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

author-image
WebDesk
New Update
Tamilisai at Kovai

கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Advertisment

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் Y20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தொழில் துறையில் இந்தியா எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான மாநாடு இது. பலத்துறைகளில் இந்தியா முன்னேறி வரும் நிலையில் ஜி 20 மாநாட்டை நடத்தி உலகிற்கு வழிகாட்டி வருகிறோம். எதற்கு தீர்வு காண வேண்டுமென்றாலும் இந்தியா மற்ற நாடுகளை எதிர்நோக்கி இருந்த சூழலில், தற்போது மற்ற நாடுகள் முடிவுகளுக்காக இந்தியாவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

சந்திராயனுக்கு விண்கலத்தை அனுப்பிவிட்டோம், புதிய பாராளுமன்றத்தை கட்டி விட்டோம், 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாரதப் பிரதமர் பிரதமரின் உறுதியான தலைமையின் கீழ் நிறைவேறி உள்ளது.

இன்று நிறைய விஷயங்களுக்கு தமிழகத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கைகளை பின்பற்றுவது, நீட் தேர்வை பின்பற்றுவது என பல விஷயங்கள் உள்ளது. இதில் மாணவர்களின் எதிர்காலம் இருக்கிறது. தயவு செய்து அரசியல் காரணங்களுக்காக மாணவ்ர்களை குழப்ப வேண்டாம். நீட் தேர்வில் மாணவர்களை இன்னும் அதிகமாக சேர்த்து தேர்வு எழுத வைத்து அதன் மூலம் அவர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என முயற்சி செய்ய வேண்டுமே தவிர, மாணவர்களுக்கு அவநம்பிக்கையை விதைத்து அவர்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கக் கூடாது.

புதுச்சேரியில் 10% இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு இல்லாமல் அடுத்த முறை 10%ஐ தாண்டி அதிக மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்க நாம் வழி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் வழங்கப்படும் மகளிர் உதவித் தொகையை பொறுத்தவரையில் தகுதியானவர்களுக்கு கிடைக்கவில்லை, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்துள்ளார்கள், ஒரே குழப்பம் என பலரும் சொல்லியிருக்கிறார்கள். யாரெல்லாம் தகுதியானவர்கள்  என பார்த்து கொடுக்க வேண்டும்.

மருத்துவ மேற்படிப்பில் ஜீரோ கட் ஆப் விவகாரத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு 3000 முதல் 4000 இடங்கள் அனட்டாமி பிசியாலஜி போன்ற துறைகளில் நிரப்பப்படாமல் உள்ளது. ட்ரீடிங் ஸ்பெஷாலிட்டி, டீச்சிங் ஸ்பெஷாலிட்டி என இரண்டு பிரிவுகள் மருத்துவ துறையில் உள்ள சூழலில் நிறைய பேர் ட்ரீட்டிங் ஸ்பெஷாலிட்டிக்கு செல்கிறார்கள். ஆன டீச்சிங் ஸ்பெஷாலிட்டியை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. இதனால் காலியான இடங்களுக்கு கட் ஆப் மதிப்பெண்களை குறைத்து வாய்ப்புகளை அதிகரித்தால் அதிகமானோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதனாலேயே இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள். அதிலும் இந்த வருடத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு இது.

மேலும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்ற மருத்துவக் உலகிற்கு இது ஒரு வாய்ப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே, தவிர மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று சொல்வது தவறு. குழந்தைகள் தயாராக ஆரம்பித்து விட்டார்கள், தமிழகத்தில் தான் வேண்டாம் என்கிறார்கள் ஆனால் மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இதேபோல் தமிழக கல்வித்துறை குறித்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவின் கருத்தை தான் வன்மையாக கண்டிக்கிறேன். இதே கருத்தை இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா? ஒரு மதத்தை சார்ந்தவர்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார்கள். அது உதயநிதியாகட்டும், அப்பாவுவாகட்டும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை.

சாதியை ஒழிப்பதற்கு சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி சொல்கிறார். ஆனால் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது போன்றவற்றை செய்கிறார்கள். சமுதாய நலம் சார்ந்து நடக்க வேண்டிய பள்ளிகளில் மலம் சார்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றால்,  சமுதாயம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்து முதலில் நாம் அதை சரி செய்ய வேண்டும். ஆனால் அதை விடுத்து இந்தியாவில் எதுவும் சரியாக இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது தவறு. சபாநாயகர் ஏற்கனவே இதுபோன்று பேசியிருக்கிறார் என்பதால் இவர் சொல்வது சரியா என்பதை சமுதாயத்திற்கே விட்டு விடுகிறேன்.

சனாதனம் குறித்து பேசிய உதயநிதியை, சின்னப்பையன் பேசியதற்கு எதற்கு கவலைப்படுகிறீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டிருக்கிறார். சின்ன பையனை எதற்கு அமைச்சர் ஆக்கினீர்கள். மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் உதயநிதிக்கு பெருமை சேர்க்க நினைத்து சிறுமை சேர்த்து இருக்கிறார்.

மேலும், உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. உறுப்பு தானத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதேவேளையில் உறுப்பு தானத்திற்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், உறுப்பு தானத்திற்கு பிறகு வரும் சட்டரீதியான பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுப்பதுடன் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு ஏதேனும் நிதி உதவிகளை செய்ய வேண்டும்.

பிரதமர் வெளிப்படையான நிர்வாகம் செய்கிறார் என்பது உலகுக்கே தெரியும் என்பதால் சி.ஏ.ஜி அறிக்கையை தான் நம்பவில்லை. பொருளாதார நிபுணர்கள் இதற்கு கருத்து சொல்வார்கள். 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் காங்கிரஸார் உள்ளனர். பல ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இன்று உடனே செய்ய வேண்டும், உடனே செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மேலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி அதிகாரத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது பா.ஜ.க. தகுதியான, திறமையான பெண்கள் சேவை செய்ய வேண்டும், தகுதியான பிரிவை சார்ந்தவர்களுக்கு தகுதியான இட வாய்ப்பை தர வேண்டும் என்பதற்காக தான் செய்கிறார்கள். பிரதமர் எந்த திட்டத்தை செய்தாலும் சரியாக செய்வார்.

வைகோ சொன்னது இதுவரை தமிழகத்தில் ஏதாவது நடந்ததா? அவர் எந்த கூட்டணியில் இருக்கிறார்? யாரை எதிர்த்து வெளியே சென்றார்? இதெல்லாம் பெரிய கதை. அதனால் அதை விட்டு விடுவோம். காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்னென்ன பேசினீர்கள். கர்நாடக அரசு உங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். எனவே இரு முதல்வர்களும் பேசி காவிரி விவகாரத்திற்கு தீர்வு காணலாம். டெல்டாவை சார்ந்தவர் என்று பெருமையாக பேசும் முதல்வர் காவிரி விவகாரத்திற்காக அரசியல் அணுகுமுறையை, அரசியல் நட்பை ஏன் பயன்படுத்தவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு உங்கள் நட்பை ஏன் பயன்படுத்தவில்லை? அது ஓட்டுக்காக மட்டும் தானா? நாட்டுக்காக இல்லையா? இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore Tamilisai Soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment