சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை சொல்லாதது ஏன்? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் திருமதி. சோனியா காந்தி பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்கள்.
ஆனால், கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர், கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?” என்று சோனியா காந்தியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தி.மு.க மகளிர் அணி சார்பில் சனிக்கிழமை மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் சோனியா காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“