சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாராக மாதவி என்பவர் பணியாற்றி வந்தார். மேயர் பிரியாவின் தபேதார் என்ற முறையில் பிரியாவுடன், மாதவி அரசு விழாக்களில் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், மாதவிக்கு லிப்ஸ்டிக் பூசும் பழக்கம் இருந்ததாலும், அதனை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் அறிவுரை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் இருந்து தபேதார் மாதவி லிப்ஸ்டிக் அணிந்துள்ளார். இதனை மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கர் கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிவசங்கர் இடமிருந்து மாதவிக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி மெமோ ஒன்று அனுப்பபட்டுள்ளது. கடமை தவறுதல், பணிக்கு உரிய நேரத்தில் வராமல் இருத்தல், சீனியர்களின் உத்தரவுகளை மதிக்காதது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு மெமோ அனுப்பபட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மாதவி, ‘நீங்கள் லிப்ஸ்டிக் அணியக்கூடாது என கூறினீர்கள். ஆனால் நான் லிப்ஸ்டிக் அணிந்தேன். இது குற்றம் என்றால் லிப்ஸ்டிக் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை காட்டுங்கள். சென்னை மாநகராட்சி போன்ற ஒரு அமைப்பில் மனித உரிமைகளை மீறும் வகையிலான இத்தகைய விதிமீறல் நடக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாதவி மணலி மண்டல பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என மேயர் பிரியா தரப்பில் கூறப்பட்ட போதிலும் விவாதம் நடைபெறுகிறது.
தொடர்ந்து இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அதில், " அதிகாரமா ?..... அலங்காராமா ?.....
அகங்காரமா ?.....
சென்னை மாநகராட்சியின் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் ஒன்று சொன்னாலும். வேறு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அவர் மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம். மேயரின் அதிகாரமா ? தபேதாரின் பெண் உரிமையின் அலங்காரமா? தவேதாரின் அலங்காரத்தை பொறுத்துக்கொள்ளாத மேயரின் அகங்காரமா? பெண் ஊழியர் தானே என்ற இளக்காரமா?
விசாரணை தேவை....
விவரமும் தேவை...
விளக்கமும் தேவை...
சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் அரசின் மற்றொரு சமூக அநீதி இது" எனப் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“