தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். கார் மற்றும் பைக் ரேஸ்களில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார். பாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க உள்ள அவர் தீவிர பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், விஜயை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி? என்று முன்னாள் ஆளுநரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்திய தமிழிசை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், உதயநிதி நடிகர் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறார். விஜய்க்கு கோபம் வருவதற்கு அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா என தெரியவில்லை. உலக அரங்கில் விளையாட்டை முன்னிறுத்த அஜித்துக்கு வாழ்த்து கூறிவிட்டு சாமானிய மக்கள் விளையாடும் மாநகராட்சி விளையாட்டு திடல்களுக்கு 10 பேர் பயிற்சி பெற்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1200 கட்ட வேண்டும் என்ற மிகக் கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் விளையாட்டு திடலுக்கு கட்டணம் விடுத்திருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
போதை பொருள் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் மாதவரத்தில் 27 கோடி ரூபாய் போதை பொருட்கள் பிடிபட்டிருக்கிறது. போதை பொருளிலிருந்து குழந்தைகளை வெளியில் கொண்டு வர விளையாட்டு தேவை. விளையாட்டை பிரதமர் ஊக்கப்படுத்தி வரக்கூடிய நிலையில் விளையாட்டை நசுக்கும் அளவிற்கு மாநகராட்சி பூங்காக்களில் விளையாடுபவர்களுக்கு கட்டணம் வசூலிப்பது உடனே திரும்ப பெற வேண்டும்.
அம்மா அரங்கம், சர்பிட்டி தியாகராய அரங்கம் நஷ்டத்தில் ஓடுகிறது என சார் பிட்டி தியாகராய அரங்கம், அம்மா அரங்கங்களை தனியாருக்கு விடுவதை உடனே திரும்ப பெற்று ஏழை மக்கள் திருமண விழாக்கள் நிகழ்ச்சிகளை நடத்தி பயன்பெறும் வகையில் அங்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“