New Update
00:00
/ 00:00
பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். எனவே இந்த பகுதி முழுவதும் பேரி கேட்டுகள் அமைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாகனங்களுக்கு இதற்குள் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பாஜகவினரும் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார். மேலும் இதனை மக்கள் தரிசன யாத்திரை என தாங்கள் அழைப்பதாகவும், இது சரித்திர யாத்திரையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், பத்திரிக்கை செய்திகளில் அது போன்று உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக பாஜக கட்சி சார்பில் நான் கருத்தை சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
மேலும் அதனை தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் அதனை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்ததாக தெரிவித்தார். எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு அவர்களுடன் இணக்கமாக இருந்து இந்த பேரணி நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருவதாக தெரிவித்தார். கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த இருப்பதாக கூறினார்.
இதற்கான முன் அனுமதியும் பெறப்பட்டு உள்ளது என்று கூறியவர், தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களில் இஸ்லாமியர்களும் அடக்கம், இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இரண்டு மூன்று நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.