Advertisment

திருமா இப்படி தரம் தாழ்ந்து பேசுவார் என கனவிலும் நினைக்கவில்லை: தமிழிசை வேதனை

"திருமாவளவன் நாகரிகமான அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் தரம் தாழ்ந்து மிகவும் மோசகமாக கருத்தை தெரிவித்து இருக்கிறார். அவரிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை." என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
 Tamilisai Soundararajan responds to Thirumavalavan speech at VCK anti liquor conference Kallakurichi Tamil News

"திருமாவளவன் அப்பட்டமான அரசியல் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். மது கொள்கைக்கு மட்டும் மத்திய அரசிற்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்." என்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நேற்று வியாழக்கிழமை (செப்.2) நடைபெற்றது. இந்த மாநாட்டை வி.சி.க தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தி.மு.க சார்பில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வாசுகி மற்றும் கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிலையில், இந்த மது ஒழிப்பு மாநாடு குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து இருந்தார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் "வி.சி.க இன்று மது ஒழிப்பு மாநாடு என்று நடத்துகிறார்கள். சிறுத்தை ஆரம்பித்துச் சிறுத்துப் போய்க் கொண்டிருக்கிறது என நான் ஏற்கனவே தெரிவித்தேன். அந்த வகையில், இந்த மாநாடும் அப்படிதான். 

மது ஒழிப்பு மாநாட்டிற்கு அவர்கள் கட்சியில் ஆதரவு இல்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன் இதுதான் அவர்களின் கொள்கை. இன்று காலை காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த திருமாவளவன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் காந்தியை தவிர்த்து விட்டு காமராஜருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார். மது ஒழிப்பு மாநாடும் நடத்தும் திருமாவளவன் ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று எனக்கு தெரியவில்லை." என்று கூறினார். 

தமிழிசையின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய திருமாவளவன், "காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகளில் இரண்டு கொள்கைகள் உடன்பாடு உண்டு. ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. அவருடைய உயிர் மூச்சு கொள்கைகளில் ஒன்று மதுவிலக்கு. அதனால்தான் காந்தியடிகளின் பிறந்த நாளில் அக்டோபர் இரண்டில் இந்த மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது.

காந்தி மது ஒழிப்பிற்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அவருடைய கொள்கைக்கு அது எதிராக இருக்குமோ என்று தமிழிசை சொல்லியுள்ளார். தமிழிசை என்ன சொல்ல வருகிறார் என்றால் திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடிய ஆள் என்று சொல்கிறார். அக்கா தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போல் எனக்கும் அந்த பழக்கம் இல்லை” என்று பேசியிருந்தார். 

இந்நிலையில், திருமாவளவன் இவ்வாறு பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அவரது பேச்சுக்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க அறிக்கை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க தலைவர்கள் பலரும் திருமாவளவன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், திருமாவளவன் பேச்சு குறித்து பேசியுள்ள தமிழிசை சௌந்தரராஜன், 'திருமாவளவன் இப்படி தரம் தாழ்ந்து பேசுவார் என கனவிலும் நினைக்கவில்லை' என்று கூறியுள்ளார். 

"திருமாவளவன் நேற்று பேசியது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் இவ்வளவு நாட்களாக அந்தக் கூட்டணியில் (தி.மு.க) தான் இருக்கிறார்கள். இதற்கு முன்னால் திருமாவளவன் மது விலக்கு பற்றி எந்தக் கொள்கையையும் எடுத்து வைக்கவில்லை. தங்களுக்கு அதிகப்படியான இடம் வேண்டும் என்கிற கோரிக்கையுடன், தங்களது கட்சியில் உள்ள ஒருவரை கூப்பிட்டு, தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேட்டியளிக்க சொல்லியிருக்கிறார். 

திருமாவளவன் அப்பட்டமான அரசியல் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். மது கொள்கைக்கு மட்டும் மத்திய அரசிற்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். 

திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று எனது அரசியல் வாழக்கையில் நினைத்து கூட பார்க்கவில்லை. அரசியல் சார்ந்து உங்கள் சுயநலத்திற்காக மது விலக்கு கொள்கையை கொண்டு வருகிறீர்களே? என்கிற அர்த்தத்தில் தான் நான் கூறினேன். 25 ஆண்டு கால எனது அரசியல் வாழ்க்கையில் நான் தனிநபர் தாக்குதல் நடத்தியதே கிடையாது. நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். 

திருமாவளவன் நாகரிகமான அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் தரம் தாழ்ந்து மிகவும் மோசகமாக கருத்தை தெரிவித்து இருக்கிறார். அவரிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவரது அரசியல் வாழ்க்கையில் இது ஒரு கரும்புள்ளி." என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thirumavalavan Tamilisai Soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment