மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வரும் நிலையில், தென் சென்னை தொகுதியில் பின்னடைவைச் சந்தித்து வரும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுகொண்டு மக்கள் சேவை செய்வதுடான் கடமை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க-வின் முக்கிய முகமாக தமிழிசை சௌந்தரராஜன் திகழ்கிறார். தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பா.ஜ.க சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.
மக்களவைத் தேர்தல் 2024, வாக்கு எண்ணிக்கை வெளியாகி வருகிறது. இதில் தென் சென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாள தமிழச்சி தங்கபாண்டியன் முதல் இடத்தில் முன்னிலை வகித்து வருகிறாஅர். தமிழிசை சௌந்தரராஜன் 2வது இடம் பிடித்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுகொண்டு மக்கள் சேவை செய்வதுடான் கடமை என்று கூறினார்.
தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். முதலில் நமக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடு, பல லட்சக் கணக்கான தோழர்கள், பல ஆயிரக் கணக்கான வேட்பாளர்கள், மக்களை நம்பி ஜனநாயகத் திருவிழாவில் இறங்கி இருக்கிறார்கள். அதனால், நமது ஜனநாயகத்திற்கும் இந்த தேர்தல் முறைக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தினோம் என்றால் நிச்சயமாக இது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடும். அதனால், உலகமே நமது தேர்தல் முறையைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறது. அதனால், நிச்சயமாக இந்த ஜனநாயக முடிவுகளின் மீது நம்பிக்கை வைத்து, இந்த ஜனநாயகத்தை நமது வணக்கத்தை தெரிவித்து, மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், மக்கள்தான் இந்த ஜனநாயகத்தில் முதல் சக்தியைப் படைத்தவர்கள். அவர்கள் கொடுக்கின்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொன்டு மக்களுக்கு பணியாற்றுவதுதான் ஒவ்வொரு வேட்பாளரின் கடமையாக இருக்க முடியும். எனது கடமையும் அதுதான். நான் மகிழ்ச்சியோடு, ஒவ்வொரு வாக்கையும் நன்றி உணர்ச்சியோடு ஏற்றுக்கொண்டு வருங்காலத்தில் சேவை செய்ய அடிப்படையாக இருக்கும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“