Advertisment

இ.பி.எஸ் மீதான அண்ணாமலை விமர்சனம்; தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் – தமிழிசை

அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக கருத்து சொல்வதற்கும், முடிவெடுப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம் – தமிழிசை சவுந்தரராஜன்

author-image
WebDesk
New Update
tamilisai

மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் தி.மு.க.,வில் புயலை உருவாக்கிவிட்டார். தி.மு.க.,வில் துரைமுருகனுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

Advertisment

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஆகஸ்ட்26) சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் “கிருஷ்ணன் இந்த உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டியவர். கீதையை நம் அனைவருக்கும் அருளியவர். கீதை வழி சென்றால், அந்தப் பாதை சரியாக இருக்கும் என நமக்கெல்லாம் உணர்த்தியவர். அதனால், கிருஷ்ணர் பிறந்த நாளில், கோபாலபுரத்தில் உள்ள கோபாலை தரிசிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முருகன் மாநாட்டை நேரில் செல்லாமல், காணொளி வழியாக துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், சாதி, மத வேற்றுமை பார்ப்பதில்லை எனக் கூறினார். உண்மையில் மத, இன, சாதி பாகுபாடு பார்க்கவில்லை என்றால், முதல்வர் கிருஷ்ண ஜெய்ந்தி வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும். முதல்வரின் வாழ்த்தை அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அவர்கள் வேறுபாடு பார்க்கிறார்கள் என்று தான் அர்த்தம். முதல்வர் தனது நம்பிக்கையை விட, பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றாலும், இறைவனின் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு. 

கிறிஸ்தவ பள்ளிகளிலும், மதரஸாகளிலும் அவர்கள் மதப்படிதான் கல்விக்கூடத்தை நடத்துகிறார்கள்.  அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளில் கந்தஷஷ்டி கவசம் படிப்பதில் என்ன தவறு இருக்கிறது. இன்னும் சொல்வதானால், இதை அனைத்து பள்ளிகளிலும் கொண்டுவர வேண்டும் என்பது என் கருத்து. வி.சி.க எம்.பி ரவிக்குமார் இந்து கோயில்களிலிருந்து வரும் வருவாய் தேவையில்லை எனக் கூறமுடியுமா... அதுமட்டும் தேவை, அதன் நம்பிக்கை தேவையில்லை என்பது எப்படி நியாயமாகும். பண்பாட்டு ரீதியில் அது சரிதான்.

அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தது... பொதுமேடையில் பேசுவது என்பதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரின் பாணி. ஆனால், என்னைப் பொருத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது என் கோரிக்கை. 

அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக கருத்து சொல்வதற்கும், முடிவெடுப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. பின்பு அது விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்படலாம். எனவே மேடையில் மட்டுமே முடிவு செய்வது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது என் கேள்வி.. என்னைப் பொறுத்தவரை தி.மு.க ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும். அதுதான் எங்களது ஒற்றைக் குறிக்கோள். வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை எங்களது முழு கவனமும் உறுப்பினர் சேர்க்கையில் தான் இருக்கப்போகிறது.

கட்சியில் புதிதாக இணைந்த விஜயதரணி 6 மாதங்களாகியும் பதவி வழங்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அது இயல்பு தான். பா.ஜ.க.,வில் யாரெல்லாம் இணைந்திருக்கிறார்களோ, அவர்களுக்கான அங்கீகாரத்தை பா.ஜ.க நிச்சயம் வழங்கும். சில நேரத்தில் அங்கீகாரம் உடனே கிடைக்கும். சில நேரங்களில் தாமதமாகும். தாமதம் என்பதை விட சில காலங்கள் ஆகலாம். எனவே, விஜயதரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் தி.மு.க.,வில் புயலை உருவாக்கியிருக்கிறார். நான் சிறுவயதில் துரைமுருகன் வீட்டின் முன்பு மணலில் விளையாடி இருக்கிறேன். அவர் வீட்டின் முன்பு விளையாடிய நான், ஒரு கட்சியின் தலைவராகி, 2 மாநில ஆளுநராகி, தற்போது ஒரு கட்சியை பலப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் மாணவராக இருந்திருக்க முடியாது. கண்டிப்பாக ஆசிரியராக தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால்தான் வாரிசு அரசியலை வேண்டாம் என்கிறோம். கட்சிக்காக உழைக்கும் தி.மு.க தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும்,” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilisai Soundararajan Duraimurugan Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment