சமூகத்தில் சாதி, மத, பெண்ணடிமை ஆகிய மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (செப்டம்பர் 17) சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு திடீரென வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
த.வெ.க தலைவர் விஜய், பெரியார் திடலுக்கு திடீரென வருகை தந்ததால், அங்கே அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். அங்கே இருந்த ரசிகர்கள் பலர் தங்கள் செல்ஃபோன்கலில் விஜய் உடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், விக்ரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் த.வெ.க-வின் கொள்கைகள், கோட்பாடுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் யாரும் எதிர்பாராத வகையில் பெரியார் நினைவிடத்திற்கு வந்து, பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, விஜய் நேரடியாக ஒரு தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்தது பெரியார் சிலைக்குதான். பெரியார் திராவிட இயக்கங்களின், முற்போக்கு இயக்கங்களின் பிம்பமாக பார்க்கப்படுகிறார். அதனால், இது விஜய்யின் அரசியல் கொள்கையாகப் பார்க்கப்படுகிறது.
பெரியார் பிறந்தநாளில் த.வெ.க தலைவர் விஜய், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது தொடப்ராக கருத்து தெரிவித்த பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “விஜய் திராவிட சாயலைப் பூசிக்கொண்டுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் ஊடகங்களிடம் கூறுகையில், “இதுவரை அவர் நேரடியாக எந்த சிலைகளுக்கும் மரியாதை செலுத்தியதில்லை. முதன்முறையாக மரியாதை செய்வது, பெரியார் சிலையாக இருக்கிறது. அவர் எந்த பாதையை தேர்வு செய்ய போகிறார் என நாம் யோசித்துக் கொண்டிருந்த சூழலில், தன்னுடைய பாதையை அவர் தெரிவித்துள்ளார். பெரியாரை புகழ்வதன் மூலமும், நேரடியாக சென்று அவரது சிலைக்கு மரியாதை செய்ததன் மூலமும், தனது பாதையை மக்களுக்கு சொல்கிறார்.
புதிதாக ஒருவர் கட்சி தொடங்கும்போது, இதுவரை இருக்கும் கட்சிகளிடம் இருந்து மாறுபட்ட சித்தாந்தம், கொள்கை போன்றவற்றுடன் இருக்க வேண்டும் என்பது என்னை போன்றவர்கள் மற்றும் சாதாரண மக்களது எதிர்பார்ப்பு.
ஒருவர் புதிதாக கட்சி தொடங்குகிறார். அவரது பார்வை மற்ற கட்சிகளின் சாயல் இல்லாமல், பரந்துபட்ட பார்வையாக இருந்தால் புதிய களத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் தனது கொள்கையை சொல்லிக்கொண்டு இருக்கிறார். இது ட்ரெய்லர் மாதிரி. ஏனெனில், அவர்கள் திரைப்படங்களில் நடித்தவர்கள். ட்ரைலரில் வருவதுதானே மெயின் பிக்சரில் வரும். மாநாட்டில் என்ன கொள்கையை சொல்லபோகிறார் என்பதை தற்போதே சொல்லிவிட்டார்.. ட்ரைலர் வெறு, படம் வேறாகவா வரப்போகிறது” என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்ட பா.ஜ.க-வினர் த.வெ.க தலைவர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காததற்காக விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே, வி.சி.க தலைவர் திருமாவளவன், த.வெ.க தலைவர் விஜய், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதற்காக பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.