பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை மருத்துவராக இருக்கும்போது நிறைய பணத்தை சம்பாதித்து விட்டு தான் வந்திருக்கிறேன் என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் தலைமையில் நடைபெறும் 'பரிக்ஷா பே சர்ச்சா 2024' நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்பில் ஊழல் நடந்துள்ளது இதில் ஆளுநருக்கும் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகின்றனரே என ஆளுநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, என்ன தொடர்பு இருக்கிறது, என்னிடம் வந்து கேட்க சொல்லுங்கள். குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என செய்திருக்கிறோம். இதில் என்ன தவறு நடந்திருக்கிறது என்ன ஊழல் நடந்தது என்று சொல்லட்டும். பணத்தை பற்றி தன்னிடம் பேசினால் எனக்கு ரொம்ப கோபம் வரும். மருத்துவராக இருக்கும்பொழுது நல்ல சம்பாதித்து விட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். சம்பாதிப்பதற்காக இங்கு வரவில்லை. அடிப்படை ஆதாரம் இல்லாமல் சும்மா சும்மா குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என தமிழிசை ஆவேசமாக பதில் அளித்தார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“