சென்னையில் அனுமதியின்றி பா.ஜ.க சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கூறி, தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க-வினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 'சமகல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கத்தை பா.ஜ.க தொடங்கியுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச் 5) தொடங்கிய இந்நிகழ்வில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் செயல்படப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 6) காலை சென்னை விருகம்பாக்காம் எம்.ஜி.ஆர் நகரில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பா.ஜ.க சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது இப்பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி பெறவில்லை எனக் கூறியும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறியும், பா.ஜ.க-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அனுமதி பெற்று தான் கையெழுத்து இயக்கம் நடைபெறுவதாகக் கூறிய தமிழிசை, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், போலீசார் அவரை கைது செய்தனர். எனினும், போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து அவர் கடும் வாக்குவாதம் செய்தார்.
இதனையடுத்து அங்கு குழுமியிருந்த பா.ஜ.க.,வினர் காவல்துறையினரை எதிர்த்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அனுமதியை மீறி பொதுமக்களிடம் பா.ஜ.க.,வினர் கையெழுத்து பெற்றனர்.
இந்தநிலையில், அங்கு வந்த தி.மு.க.,வினர் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தடையை மீறி கையெழுத்துப் பெற்ற தமிழிசையை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து, ஒரே நேரத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்க, தான் 3 மணி நேரம் வெயிலில் நின்றிருந்ததாக கூறினார். மேலும், காவல்துறையினர் என்னை அப்புறப்படுத்துவதிலே குறியாக இருந்தனர். ஒரு அரசியல்வாதி பொதுமக்களை சந்திப்பதை தடுப்பதற்கு இவர்கள் யார்? தனிமனித உரிமை தமிழகத்தில் மிதிக்கப்படுகிறதா? ஸ்டாலின் அரசு இந்த கையெழுத்து இயக்கத்தைப் பார்த்து பயப்படுகிறது என்றும் தமிழிசை கூறினார்.