தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து முரளிதர ராவ் விளக்கம் அளித்தார்.
தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறது. பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆனதைத் தொடர்ந்து இடைக்கால பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற அவர், பிறகு அதிகாரபூர்வ மாநில தலைவராக தேர்வும் பெற்றார்.
தமிழிசை செளந்தரராஜன் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு இருக்கிறது. இதற்கிடையே அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற முடிவெடுக்கப்பட்டுவிட்டதாகவும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் இதற்கான பரிந்துரையை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும், தமிழிசைக்கும் இடையே அண்மையில் ட்விட்டரில் மோதல் வெடித்த நிலையில், தமிழிசை மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவல் இன்னும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-பாமக இடையே தேர்தல் கூட்டணி ஏற்படுத்தியதில் முரளிதர் ராவ் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தமிழிசை மாற்றப்பட இருப்பதாக வெளியான செய்திகளுக்கு முரளிதர் ராவ் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக இன்று (ஜூன் 29) தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அமித்ஷாவிடம் நான் அளித்த அறிக்கை அடிப்படையில் தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்பட இருப்பதாக சில மீடியாக்களில் வெளியான செய்தி கொஞ்சம்கூட அடிப்படை அற்றது. உண்மைக்கு மாறானதும், உள்நோக்கம் கொண்டதும் ஆகும்’ என குறிப்பிட்டிருக்கிறார் முரளிதர் ராவ்.
தமிழிசை செளந்தரராஜனை மாற்றும் திட்டம் பாஜக தேசிய தலைமைக்கு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக முரளிதர் ராவ் விளக்கம் அமைந்திருக்கிறது.
இதற்கிடையே தனக்கு ஆதரவாக கருத்து கூறிய முரளிதர்ராவை டெல்லியில் சந்தித்து நன்றி கூறினார் தமிழிசை. பின்னர் நிருபர்களிடம் பேசுகையிலும், முரளிதர் ராவுக்கு நன்றி கூறினார்.