/indian-express-tamil/media/media_files/2025/09/20/tamilisai-soundararajan-2025-09-20-18-50-49.jpeg)
Tamilisai Soundararajan
கோவையில் இன்று நடைபெறும் 'மோடி தொழில் மகள்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு அரசியல் தலைவர்களையும், குறிப்பாக விஜய் குறித்தும் பல முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "நான் எப்போதுமே ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்வேன். 'மோடியின் தொழில் மகள்' திட்டம் ஒரு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சி. நாங்கள் இந்த திட்டத்தில் கலந்துகொள்கிறோம். அதே சமயம், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. 'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. கவலை அளிக்கும் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், காசா போரைப் பற்றி பேசுகிறார்கள். அதற்கு மோடிதான் காரணம் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து அவர்கள் அரண்டு போய் உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
மேலும் அவர், "கீழடிக்கு நிதி ஒதுக்கியது பிரதமர் மோடிதான். நீங்கள் மத்தியில் இருந்தபோது எத்தனை தொல்பொருள்களை எடுத்து அங்கீகாரம் கொடுத்தீர்கள்? தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்துக்கொண்டிருப்பவர் பிரதமர் மோடிதான். இதற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு சான்று. தமிழுக்கு நாங்களும் சொந்தக்காரர்கள். நீங்கள் மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்று கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறித்து பேசிய அவர், "திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் அரசியல் வாழ்வை அமைப்பேன் என்று சொன்ன கமல், திமுக எதை சொல்கிறதோ அதற்கு அடிபணிய வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஒரு எம்.பி பதவி கிடைத்தவுடன் திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார். இது சுயநல அரசியல். பொதுநல அரசியல் என்பது பாஜக மற்றும் எங்கள் கூட்டணிக்கு மட்டும்தான்" என்று குற்றம் சாட்டினார்.
சரத்குமார் கட்சி பாஜகவுடன் இணைந்தது குறித்த கேள்விக்கு, "சரத்குமார் எங்களோடு கட்சியைத்தான் இணைத்தார். ஆனால், இவர்கள் கூட்டணி என்று சொல்லி ஒரு எம்.பி பதவியை வாங்கி உள்ளார்கள். கமல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரா, உறுப்பினரா அல்லது திமுகவின் தலைவரா, உறுப்பினரா? கமலின் கட்சி அங்கீகாரத்தை இழந்து இருக்கிறது. அதையும் சரத்குமாரின் கட்சியையும் எப்படி ஒப்பிட முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
விஜய் பற்றிப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "நாங்கள் மருத்துவர்கள், விஜய் ஒரு நடிகர். விஜய் பின்னால் வருபவர்கள் அனைவரும் அவருக்கு ஓட்டு போடுவார்களா என்பது தெரியாது. தேர்தல் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம். வேடிக்கை பார்ப்பதற்கு கூட்டம் வரும். எங்களுக்கு கூட்டம் வரவில்லை என்று சொல்ல வேண்டாம். கட்சித் தலைவராக விஜய் இப்போதுதான் அரசியலுக்குள் வந்துள்ளார். அவர் அரசியலில் போராட்டங்களை நடத்தியது கிடையாது. அவர் திமுகவிற்கு சவாலாக இருக்கட்டும். திமுகவிற்கு எதிரான எதிர்ப்பை அவர் தீவிரப்படுத்தட்டும். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடமை எங்களுக்கும் உள்ளது, விஜய்க்கும் உள்ளது" என்றார்.
மேலும் அவர், "விஜய்க்கு தற்போது நடப்பது பாராளுமன்றத் தேர்தல் அல்ல, சட்டமன்றத் தேர்தல் என்பதை நினைவுபடுத்த வேண்டும். யார் வீட்டுக்குள் இருக்கிறார்களோ அவர்களைத்தான் வெளியே அனுப்ப வேண்டும். அப்படி பார்த்தால், சட்டமன்றத் தேர்தலில் கோட்டைக்குள் அமர்ந்திருப்பது திமுகதான். அவர்களைத்தான் வெளியே அனுப்ப வேண்டும். விஜய்க்கு டைரக்ட் செய்பவர்களையும், ஸ்கிரிப்ட் ரைட்டரையும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். விஜய் நன்றாகத்தான் பேசுகிறார், நன்றாகத்தான் நடிக்கிறார். பிரச்சாரத்தில் யாரையும் மயக்கமடைய விடாமல், தண்ணீர் எல்லாம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவல்துறையினர் விஜய் பிரச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது ஒரு கட்சிக்கு மட்டும் நெருக்கடி கொடுப்பது போல் உள்ளது" என்று கூறினார்.
விஜய் வாக்கு சதவீதத்தை பிரிக்கலாம் என்று கூறிய தமிழிசை, "விஜய் எடுக்கப்போவது திமுக கூட்டணியின் வாக்குகளைத்தான். திமுகவை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது. ஆனால், 'ஏதோ பாஜகவையும் ஏதோ தொடுவோம்' என்று விஜய் பேசுகிறார். அது வேண்டாம். 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். அதில் விஜய்க்கும் பங்கு உள்ளது" என்று தெரிவித்தார்.
திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் கூட்டணிக்கு வரலாம் என்றும், திமுகவை தோற்கடிப்பது அனைவரின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். விஜயை ஒருமையில் பேசுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "எந்தக் கொள்கையில் உள்ள தலைவர்களாக இருந்தாலும், மரியாதை குறைவாக யாரையும் பேசக்கூடாது, ஒருமையில் பேசக்கூடாது" என்றார்.
இறுதியாக, அரசியல் நிகழ்வுகளை யூடியூப் இன்ஃப்ளூயன்சர்கள் பேசுவது குறித்து, "மக்களிடம் இன்ஃப்ளூயன்ஸ் சென்றுவிட்டது. ஸ்டாலினுக்கு கோபம் வந்தது, சம்பவம் நடந்தது, பின்பு கோபம் வந்தது. ஓட்டு விடாது, வீட்டுக்கு போக வேண்டியதுதான், அதுதான் நல்லது. இதை ரீல்ஸில் போட்டுக்கொள்ளுங்கள்" என்று நகைச்சுவையாக விமர்சித்து விடைபெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.